பொங்கல் விருந்தாக 4 படங்கள் வெளியாகின்றன

தமிழர்கள் பண்டிகையான பொங்கல் திருநாளையொட்டி, வருடந்தோறும் ரசிகர்களுக்கு விருந்தாக பல புதிய திரைப்படங்கள் திரைக்கு வரும். கடந்த வருடம் (2015-ல்) ‘ஐ,’ ‘ஆம்பள,’ ‘டார்லிங்,’ ‘ஆய்வுக்கூடம்’ ஆகிய 4 படங்கள் திரைக்கு வந்தன. இந்த வருட பொங்கலுக்கும் 4 புதிய படங்கள் திரைக்கு வருகின்றன. பொங்கலுக்கு முன்தினமே போகி பண்டிகை அன்று (14-ந் தேதி) 4 படங்களும் வெளிவருகின்றன. அந்த படங்கள் வருமாறு:-

1.கதகளி: விஷால் கதாநாயகனாக நடித்த படம். அவருக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்து இருக்கிறார். பாண்டிராஜ் டைரக்டு செய்துள்ளார். இது, குடும்பப்பாசம் நிறைந்த அதிரடியான கதையம்சம் கொண்ட படம்.

கடலூரை சேர்ந்த ஒரு இளைஞர் வேலைக்காக சென்னைக்கு வருகிறார். உண்மைக்கு மட்டுமே பயப்படுகிற அந்த இளைஞரை ஒரு கும்பல் கொலைப்பழியில் மாட்டி விடுகிறது. அந்த பழியில் இருந்து அவர் தன்னையும், தன் குடும்பத்தையும் எப்படி மீட்டெடுக்கிறார்? என்பதே கதை. ஒரு பிரச்சினையில் தொடங்கி பிரச்சினையில் முடிகிற விறுவிறுப்பும், திகிலும் கலந்த திரைப்படம், ‘கதகளி.’ படம் முழுக்க மழை பெய்து கொண்டிருப்பதும், இடைவேளைக்குப்பின் பாடல்கள் இல்லாததும் இதன் சிறப்பு அம்சங்கள்.

2.தாரை தப்பட்டை: பாலா டைரக்டு செய்த படம் இது. சசிகுமார் கதாநாயகனாகவும், வரலட்சுமி கதாநாயகியாகவும் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்துடன் இசையமைப்பாளர் இளையராஜா 1,000 படங்களை நிறைவு செய்து இருக்கிறார்.

தாரை, தப்பட்டை, கரகாட்டம் போன்ற நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடத்தும் ஒரு இளைஞருக்கும், கரகம் ஆடுகிற ஒரு பெண்ணுக்குமான கதை இது. சம்பவங்கள் முழுவதும் தஞ்சையில் நடைபெறுவது போல் கதைக்களம் அமைக்கப்பட்டு இருக்கிறது. நாட்டுப்புற கலைஞர்களின் காதல், சோகம் மற்றும் அவர்களின் வாழ்வியலை தனக்கே உரிய முத்திரைகளுடன் டைரக்டர் பாலா படம் பிடித்து இருக்கிறார்.

3.ரஜினி முருகன்: சிவகார்த்திகேயன்-கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்து, டைரக்டர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில் வெளிவரும் படம் இது. பொன்ராம் டைரக்டு செய்து இருக்கிறார். ஒரு தாத்தாவுக்கும், பேரனுக்குமான பாசப்பிணைப்பை கருவாக கொண்ட படம் இது.

தாத்தாவாக ராஜ்கிரணும், பேரனாக சிவகார்த்திகேயனும் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளின் மேன்மையையும், கூட்டு குடும்பத்தின் அவசியத்தையும் கதை சித்தரிக்கிறது. வருடத்துக்கு ஒருமுறையாவது குடும்ப உறவுகள் அனைவரும் சந்தித்து மகிழ வேண்டும் என்ற கருத்து படத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.

4.கெத்து: உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்த படம். இவருக்கு ஜோடியாக எமிஜாக்சன் நடித்து இருக்கிறார். கே.திருக்குமரன் டைரக்டு செய்திருக்கிறார். காதல், நகைச்சுவை, குடும்ப பின்னணி கலந்த கதை இது.

கதாநாயகன், வம்பு தும்புக்கு போகாத இளைஞர். அவருக்கு நேர் மாறானவர், தந்தை. எந்த பிரச்சினை என்றாலும் முன்னால் நிற்பவர். இவர் மீது ஒரு கொலைப்பழி விழுகிறது. அந்த பழியில் இருந்து அப்பாவை கதாநாயகன் எப்படி மீட்கிறார்? என்பதே கதை. தந்தை-மகனாக சத்யராஜ்-உதயநிதி ஸ்டாலின் நடித்து இருக்கிறார்கள்.

Related Posts