பொங்கலுக்கு முன் விடுதலை செய்யவும்! பேரறிவாளன் தாயார் மனு

பொங்கலுக்கு முன்னதாக தனது மகனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள், தமிழக முதல்வர் அலுவலகத்தின் தனிப்பிரிவில் மனு அளித்தார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. அதை இந்திய உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது.

கருணை மனு மீது குடியரசு தலைவர் நடவடிக்கை எடுக்க தாமதமானதையடுத்து, தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ராஜீவ் கொலையாளிகளை விடுவிப்பதாக தமிழக அரசு அறிவித்தது.

இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய புலனாய்வு துறை விசாரித்த இந்த வழக்கில், குற்றவாளிகளை விடுவிப்பதற்கு மத்திய அரசுக்கு மட்டுமே உரிமை உள்ளது என தீர்ப்பளித்தது.

இந்நிலையில்,பேரறிவாளன் தாயார் அற்புதம் அம்மாள் நேற்று முதல்வர் தனிப் பிரிவில் மனு அளித்தார்.

அதில் சட்டப் பிரிவு 161வின் படி தனது மகனை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கை விசாரித்த அதிகாரி தியாகராஜன், பேரறிவாளனின் வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்ததாக கூறியுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேரறிவாளனின் நன்னடத்தை குறித்து சிறை அதிகாரிகள் அளித்துள்ள அறிக்கையை கணக்கில் கொண்டும், சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாலும் அவரை விடுவிக்குமாறு வேண்டுகோள் விடுத்தாள்ளார் அற்புதம் அம்மாள்.

Related Posts