முகப்புத்தகத்தால் ஏற்பட்ட காதலால் நபர் ஒருவரை நம்பி தனது 15 பவுண் நகைகளை வவுனியாவைச் சேர்ந்த 28 வயது யுவதியொருவர் இழந்த சம்பவமொன்று ஞாயிற்றுக்கிழமை (03) தட்டாதெருச் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
வவுனியாவைச் சேர்ந்த மேற்படி யுவதிக்கு இளைஞர் ஒருவர் முகப்பபுத்தகத்தில் நண்பராகியுள்ளார். தான் கனடாவில் இருப்பதாகக்கூறி அந்தப் பெண்ணுடன் கதைத்து பெண்ணைக் காதலிப்பதாகவும் கூறியுள்ளார்.
மேலும்,தான் இலங்கைக்கு வருவதாகவும் யுவதியைச் சந்திக்க வேண்டும் எனவும் இளைஞன் கூறியுள்ளார். இதனை நம்பிய யுவதி இளைஞன் கூறியபடி, யாழ்ப்பாணம், தட்டாதெருச் சந்தியில் அமைந்துள்ள ஆலயத்துக்கு அருகில் சென்றுள்ளார்.
அங்கு வருகை தந்த இளைஞன், தனக்கு புதையல் ஒன்று கிடைத்துள்ளது, அந்தப் புதையலைப் பெறுவதற்கு நகைகளை வழங்க வேண்டும். புதையல் பெற்றப் பின்னர் நகைகளைத் திருப்பித் தருவதாகக் கூறியுள்ளார்.
இதனை நம்பிய யுவதி தான் அணிந்திருந்த 15 பவுண் நகைகளையும் கழற்றி இளைஞனுக்கு கொடுத்துள்ளார். நகைக்கடைக்குச் சென்று சரிபார்த்து வருவதாகச் சென்ற இளைஞன், தலைமறைவாகியுள்ளார்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட யுவதி, யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.