பேஸ்புக்கே கதியாய் இருக்கிறீர்களா? உங்களுக்கு கூச்ச சுபாவம் அதிகம் என்கிறது ஆய்வு!

கூச்ச சுபாவம் உள்ளவர்கள் அதிக அளவில் பேஸ்புக்கில் கிடையாய் கிடப்பார்கள் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அதே நேரம் அவர்கள் அதிகம் ஷேர் செய்து கொள்ளாமல் வெறுமனே வேடிக்கைதான் பார்த்துக் கொண்டுள்ளார்கள் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

facebook-women

பேஸ்புக் பயனாளிகள் குறித்த ஆய்வை மேற்கொண்ட அல்பமா பல்கலைக்கழகம் மேற்கண்ட விவரங்களை கண்டறிந்துள்ளது.

இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட பல்கலைக்கழகத்தின் உதவி பேராசிரியர் பவிகா செல்டன் கூறியதாவது:

நிஜ வாழ்க்கையில் கூச்ச சுபாவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பேஸ்புக்கில் தங்கள் உலகத்தை உருவாக்கி கொள்கிறார்கள். முகத்தை வெளியே காண்பிக்காமலேயே, உலகில் என்ன நடக்கிறது என்பதை வேவு பார்க்க முடியும் என்பதால் கூச்ச சுபாவத்தினருக்கு பேஸ்புக் சொர்க்கமாக தெரிகிறது.

அதே நேரம் என்னதான் பேஸ்புக்கில் கிடையாய் கிடந்தாலும், நிஜ வாழ்க்கையை போலவே பேஸ்புக்கிலும் அவர்கள் அமைதியானவர்களாகவே உள்ளனர். போட்டோ, ஸ்டேட்டஸ் போன்றவற்றை ஷேர் செய்வது மிகவும் குறைவாகும். பிறரது நிலைதகவல்களை மட்டுமே பார்த்து ரசிக்கிறார்கள். பேஸ்புக்கில் ஏதாவது விவாதம் நடந்தால் நம்மால் அதில் பங்கேற்று அசிங்கப்பட முடியாது என்று நினைத்து விவாதத்திலும் பங்கேற்பதில்லை.

அதே நேரம் வெளியுலகில் சுறுசுறுப்பாக, கூச்சம் அற்றவர்களாக உள்ளவர்கள் பேஸ்புக்கிலும் அதேபோல உள்ளனர். அதாவது, நிலைத் தகவல்கள், போட்டோக்களை அடிக்கடி போட்டு கலக்கி வருகிறார்கள். ஆனால் இவர்கள் பேஸ்புக்கில் அதிக நேரம் செலவழிப்பது கிடையாது. வந்தோமோ, இயங்கினோமா, சென்றோமா என்று இருக்கிறார்கள்.

கூச்ச சுபாவத்தினருக்கு பேஸ்புக் மேலும் கூச்ச சுபாவத்தையே பரிசளிக்கிறது. சுட்டித்தனம் கொண்டவர்கள் மேலும் சுட்டியாக இருக்கவும் பேஸ்புக் உதவுகிறது. எனவே சுபாவத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த பேஸ்புக்கால் முடியவில்லை. அதே நேரம் கூச்ச சுபாவம் உள்ளவர்கள் வெளியுலகுடன் ஓரளவாவது தொடர்பில் இருக்க பேஸ்புக் உதவுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Posts