பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி!

பேருந்து கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை இன்று (செவ்வாய்க்கிழமை) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை சந்திப்பின் பின்னர் துறைமுகம் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் நிஷாந்த முத்துஹெட்டிகம இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி பேரூந்துக் கட்டணங்கள் 12.5% வீதத்தினாலும், ஆரம்பக் கட்டணத்தினை 12 ரூபாவாகவும் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதேவேளை தனியார் பேருந்துகளில் புதிய பேருந்து கட்டணங்கள் உரியவகையில் செயல்படுத்தப்படுகின்றதா என்பதைக் கண்டறிவதற்கு நாடுதழுவிய ரீதியில் பரிசோதனைகள் இடம்பெறுமென இலங்கை போக்குவரத்துசபை தலைமை அதிகாரி பி.எச்.ஆர்.ரி.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

மேலும் பேருந்து கட்டண அறவீடு மற்றும் பருவகால அனுமதி அட்டை வழங்காமை தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் இருக்கும் தருணத்தில் அதனை 0115 559 595 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்கலாம் எனவும் போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.

அரசாங்கம் அண்மையில் எரிபொருளின் விலையை அதிகரித்தமையால் பஸ் கட்டணத்தையும் அதிகரிக்குமாறு பஸ் சாரதிகள் கோரிக்கைகளை விடுத்திருந்தனர். இதனடிப்படையிலேயே அமைச்சரவையில் இன்று பஸ் கட்டணம் அதிகரிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts