யாழ்ப்பாணத்தில் இருந்து தினமும் காலை 8.00 மணிக்கு துணுக்காய் வரை செல்லும் அரச மற்றும் தனியார் பேருந்துகளில் போட்டித்தன்மையால் பயணிகள், அரச உத்தியோகத்தர்கள் தினமும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு மற்றும் துணுக்காய் ஆகிய பகுதிகளில் வெளி மாவட்டங்களில் இருந்து அதாவது யாழ்ப்பாணம் கிளிநொச்சி, ஆகிய பகுதிகளில் இருந்து செல்லும் அரச மற்றும் அரச சார்பற்ற திணைக்கள அதிகாரிகள் மாங்குளத்தில் இருந்து துணுக்காய் நோக்கி 7.30 மணிக்கு செல்லும் பேருந்திலேயே பயணிக்க வேண்டும். அத்துடன் மாந்தை கிழக்கு துணுக்காய் பகுதிகளின் போக்குவரத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவுகளிலேயே இடம்பெறுகின்றன.
இந்நிலையில் ஏ-9 வீதியூடாக யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா மற்றும் ஏனைய பகுதிகளுக்கு செல்லும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் போட்டிபோட்டு செல்வதனால் கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தி, இரணைமடுச்சந்தி மற்றும் ஏனைய இடங்களில் இருந்து செல்லும் அதிகாரிகளையும் பயணிகளையும் ஏற்றிச்செல்வதில்லை எனவும் அவ்வாறு தவறும் நாட்களில் மாங்குளத்தில் இருந்து முச்சக்கரவண்டி மூலமோ அல்லது வேறு ஏதாவது வாகனத்திலோ செல்லவேண்டியுள்ளதாகவும் இதனால் தாம் பல்வேறு அசௌகரிங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.