பெரும்பான்மையினருடன் சேர்ந்து காரியங்கள் இயற்றுவதில் பிழையில்லை. ஆனால் எமது தனித்துவத்தை மறந்து சுயநல காரணங்களுக்காகப் பெரும்பான்மையினருடன் சேர முற்பட்டால் எம் மீதான மரியாதை குறைந்துவிடும் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுட்டிக்காட்டினார்.
மாந்தை மேற்கு பிரதேச சபையின் சிறுவர் பூங்கா மற்றும் விளையாட்டு மைதானம் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் தனது உரையில்,
இன்று கூட திரு.சம்பந்தன் பற்றியும் அரசாங்கத்துடன் சேர்ந்து அரசியல் நடத்தும் தமிழ்த் தலைவர்கள் பற்றியும் பெரும்பான்மை சமூகத்தினரிடையே இருக்கும். கருத்தைக் கணித்தால் அவர்களுக்குத் திரு.சம்பந்தன் மீது இருக்கும் மட்டு மரியாதை மற்றவர்கள் மீது இல்லை என்பது தெரியவரும்.
இதனை நான் அரசியலுக்கு வர முன்பே தெரிந்து வைத்திருந்தேன். எப்பொழுதுமே நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து அரசியல் செய்வதே சாலப் பொருந்தும் என்று நம்புகின்றேன்.
இன்று அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் எம்முடன் ஒரே மேடையை அலங்கரிப்பதால் அவரிடம் ஒரு கோரிக்கை விடுக்கின்றேன். தயவு செய்து தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்காக நீங்கள் உங்களால் ஆன மட்டிற்கு ஒத்தாசை வழங்குங்கள்.
அதுவும் மன்னாரில் தமிழ்ப் பேசும் கிறிஸ்தவ மக்களின் நலன்களைப் பாதுகாப்பீர்களாக நாங்கள் சேர்ந்து ஆனால் எமது தனித்தனியான உரிமைகளுக்காகப் போராடும் காலம் வெகுதூரத்தில் இல்லை என தெரிவித்தார்.