பேரவை செயலகத்துக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்

வடமாகாண பேரவை செயலகத்துக்கு அதிகப்படியான வசதிகள் செய்யவேண்டியிருப்பதால் அதற்கு அதிகளவான நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என வடமாகாண சபை ஆளுங்கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர் வேண்டுகோள் விடுத்தனர்.

வடமாகாண சபையின் 2015 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத்திட்ட சமர்ப்பிப்பு மற்றும் விவாதம் தொடர்பான அமர்வின் முதல் நாள் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் புதன்கிழமை (17) இடம்பெற்றது.

வரவு – செலவுத்திட்டத்தில் வடமாகாண பேரவை செயலகத்துக்கு 321.064 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சபையில் தெரிவித்தார்.

தனது அலுவலகத்தில் வசதிகள் குறைவாகவுள்ளதாகவும் வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா தெரிவித்தார்.

அத்துடன், பேரவை செயலகத்தில் ஆளணியினர் பற்றாக்குறையுள்ளதாகவும் அதனை நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பேரவையில் நூலகம், சிற்றுண்டிச்சாலை என்பன அமைக்கப்பட வேண்டும் எனவும் உறுப்பினர்கள் முதலமைச்சரிடம் கோரினார்.

அத்துடன், தொடர்ந்து 2 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் சபை அமர்வுகள் நடக்கும் போது, உறுப்பினர் தங்கியிருந்து அதில் கலந்துகொள்வதற்கு வசதிகள் ஏற்படுத்தப்படவேண்டும் எனவும் உறுப்பினர்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

இதனை பரிசீலனைக்கு எடுப்பதாக கூறிய முதலமைச்சர், வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு 24.953 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

பொதுச் சேவை ஆணைக்குழுவில் அரச தலையீடுகள் இருப்பதை தவிர்க்க வேண்டும் எனவும், ஆளணியினர் இணைப்பின் போது பாரபட்சமின்றி சரியான ஆளணியினர் இணைக்கப்படவேண்டும் எனவும் பொதுச் சேவை சட்டத்தில் இருக்கும் தவறுகள் சீர்செய்யப்பட்டு, நியதிகள் முறையாக பதிவு செய்யப்படவேண்டும் எனவும் ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் சபையில் தெரிவித்தார்.

இதனை அமைச்சர்களும் ஏற்றுக்ககொண்டதையடுத்து, இந் நிதி ஒதுக்கீடு சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

Related Posts