தமிழ் மக்கள் பேரவை உட்பட அனைத்து தமிழ்த் தரப்புக்களினதும் கருத்துக்கள் பெறப்பட்டே அரசியல் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் கூட்டமைப்பின் விசேட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று கிளிநொச்சி கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண முதலமைச்சர், மாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். இதில், வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்ததுடன் அண்மைக்காலத்தில் கூட்டமைப்பின் தீர்மானங்கள் அது தொடர்பிலான காரணங்கள் குறித்தும் கேள்வியெழுப்பியிருந்தனர். இவ்வாறான நிலையில் காலை அமர்வு நிறைவடைந்தது.
காலை அமர்வில் பங்கேற்றிருக்காத வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பிற்பகல் 3.30 மணிக்கு கூட்டத்திற்கு வருகைதந்திருந்தார். அதனைத்தொடர்ந்து வடக்கு முதல்வர் சி.வி.விக்கினேஷ்வரன் விசேட உரையொன்றையும் ஆற்றியிருந்தார். இதனையடுத்து பல உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைத்திருந்திருந்த நிலையில் தமிழ் மக்கள் பேரவை உட்பட அனைத்து தரப்புக்களின் கருத்துக்களையும் பெறப்பட்டு அரசியல் தீர்வு திட்டம் தயாரிக்கப்படுமென்ற முடிவுக்கு வரப்பட்ட நிலையில் நேற்று மாலை 7மணியளவில் கூட்டம் நிறைவடைந்தது.
அதனையடுத்து குறித்த கூட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக்களின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கருத்து வௌியிடுகையில்,
இக் கூட்டத்தில் விசேடமாக புதிய அரசியல்அமைப்பின் உருவாக்கத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்ன, என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. அதனடிப்படையில் வெவ்வேறு தளத்தில் எங்களுடைய நிலைப்பாடுகளை கருத்ததிற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்வோம். நாங்கள் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு பொதுத் தோ்தல் விஞ்ஞாபனம் மூலம் எமது மக்களிடம் தெரியப்படுத்தியிருந்தோம். அதற்கு மக்கள் எங்களுக்கு முழுமையாக ஆதரவினை வழங்கியிருந்தார்கள். அந்த வகையில் மக்களின் முழுமையான விருப்பத்திற்கு அமைவாக ஒரு தீர்வுத்திட்டத்தை தயாரித்து அதனை அரசாங்கதிற்கு சமர்பிப்போம்.
தற்போது புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்தில் இடம்பெற்று வருகிறது. இதில் முதன் முறையாக தமிழ் மக்களின் பங்களிப்பு இருக்க கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது ஆகையினால் எங்கள் மக்களின் அரசியல் அபிலாசைகள் முழுமையாக நிறைவேறதக்கதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அதில் ஒரு நிலைப்பாட்டை எடுத்து இவ்வருட இறுதிக்குள் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினால் இயன்றதை செய்வோமென அனைத்து உறுப்பினர்களும் தீர்மானித்திருக்கின்றோம்.
அரசியல் தீர்வு திட்டத்தை உருவாக்கும் செயற்பாடுகளில் தமிழ் மக்கள் போரவை உட்பட அனைத்து தரப்புக்களினதும் கருத்துக்களை பெற்றுக்கொள்வோம். இரண்டு பிரதான கட்சிகளும் ஒற்றையாட்சியை வலியுறுத்தினாலும் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு வாக்களித்திருக்கின்றார்கள் எனவே எங்களுடைய மக்களின் தீர்ப்புக்கு அமைவாகவே நாங்கள் அரசாங்கத்துடன் பேச்சு நடத்துவோமென்றார்.