பேரழகன் பட இயக்குனர் சசி சங்கர் மரணம்

இந்த வாரம் திரையுலகத்துக்கு சோதனையான வாரமாக அமைந்துள்ளது. முன்னாள் கவர்ச்சி நடிகை ஜோதிலட்சுமி நேற்று காலமானார். அவரது மறைவு செய்தி வெளியான சற்று நேரத்தில், தயாரிப்பாளர், பாடலாசிரியர், கதாசிரியர் என பன்முகம் கொண்ட பஞ்சுஅருணாசலத்தின் மறைவு செய்தி வெளியானது. ஒரே நாளில் இரண்டு திரையுலக பிரபலங்களை இழந்த சுவடு மறைவதற்குள் மற்றொரு மரண செய்தி.சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த ‘பேரழகன்’ படத்தை இயக்கிய டைரக்டர் சசி சங்கர் மரணம் அடைந்தார்.

sasi-peralagan

அவருக்கு வயது 57. இவர் கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கோலஞ்சேரி என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். சசி சங்கருக்கு சர்க்கரை வியாதி இருந்தது. இன்று காலை வீட்டில் மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை. அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மலையாள பட உலகில் முன்னணி டைரக்டரான சசி சங்கர், 1993–ல் இயக்கிய ‘நாரயம்’ என்ற படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதை பெற்றது. திலீப்பை கூன் விழுந்தவராக வைத்து மலையாளத்தில் இவர் இயக்கிய ‘குஞ்ஞி கூனன்’ படத்தைதான் பின்னர் சூர்யாவை வைத்து தமிழில் ‘பேரழகன்’ என்ற பெயரில் டைரக்டு செய்தார்.

‘பகடை பகடை’ என்ற தமிழ் படத்தையும் டைரக்டு செய்துள்ளார். மலையாளத்தில் 10 படங்களை இயக்கி உள்ளார். மரணம் அடைந்த சசி சங்கருக்கு பீனா என்ற மனைவியும் விஷ்ணு என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர்.

சென்னையில் இருந்து அவரது மகன் கேரளா சென்றடைந்ததும் இறுதிச்சடங்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts