தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு யாழ்மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச வணிகர் கழகங்களும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் பேரணிக்கு ஆதரவு வழங்குவதா வேண்டாமா என முடிவெடுக்கமுடியாமல் யாழ்.நகர் வணிகர் கழகத் தலைவர் திணறிவருவதாக தெரியவருகின்றது.
கடந்த 2013 ஆம் ஆண்டு ஊடகவியலாளர்கள் இருவரின் உதவியோடு சுரேஸ் பிரேமச்சந்திரனை அணுகிய ஜெயசேகரம் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவேண்டும் என்ற தனது ஆசையினை வெளிப்படுத்தி ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியின் ஆசன ஒதுக்கீட்டின் ஊடாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட உதவுமாறு கேட்டுக்கொண்டார். ஜெயசேகரத்திற்கு வாய்ப்பு வழங்க சுரேஸ் பிரேமச்சந்திரன் தயங்கியபோதும் பெருவாரியான வணிகர்களின் ஆதரவு தனக்கு இருப்பதாகக் கூறி தொடர்ச்சியாக வாய்ப்புக்கோரிவந்த நிலையில் அவரிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும் யாழ்.வணிகர்கள் அனைவரும் அவரைப் புறக்கணித்த நிலையில் மாகாணசபைத் தேர்தலில் அவர் படுதோல்விஅடைந்திருந்தார்.
இந்நிலையில் எழுக தமிழா நிகழ்விற்கு ஆதரவு வழங்காது எதிர்ப்பு வெளியிட்டால் அடுத்த மாகாணசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி ஊடாக போட்டியிடுவதற்கு வாய்ப்புப் பெற்றுத்தருவோம் உங்கள் அரசியல் கனவு நனவாகிவிடும் என தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்கள் சிலர் அழுத்தம்கொடுத்துவருவதாக தெரியவருகிறது.
இந்நிலையிலேயே முன்னர் வாய்ப்பு வழங்கியமைக்காக சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு ஆதரவாக இருந்து பேரணியை ஆதரிப்பதா மீண்டும் கிடைக்கும் ஒரு அரசியல் வாழ்விற்காக எதிர்ப்பினை வெயிளியிடுவதா என குழப்பத்தில் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் வடமராட்சி,தென்மராட்சி மற்றும் வலிகாமம், தீவக வர்த்தக அமைப்புக்கள் தமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதோடு யாழ் நகர வர்த்தகர்கள் பலரும் தங்கள் வர்த்தக நிலையங்களை மூடி பேரணிக்கு ஆதரவு வழங்கப்போவதாக அறிவித்துள்ளன.