எந்தவொரு நாட்டு பிரஜைக்கும் துளியளவேனும் பாகுபாடு காட்டாத வகையிலான அரசியல் தீர்வொன்றை இந்த நாடாளுமன்றத்துக்குள் அடைய வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) அரசியல் வாழ்வில் 40 வருடங்களை நிறைவு செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பிரேரணை மீதான விவாதம் நடைபெற்றது. இந்தப் பிரேரணைக்கு நன்றி தெரிவித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எனது 40 வருடகால நாடாளுமன்ற சேவையைப் பாராட்டி விசேட சபை அமர்வை கூட்டி விவாதம் நடத்துவதற்கு கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதற்கும், விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
எதிர்வரிசையில் இருப்பதையும் சகித்துக்கொண்டோம். எதிர்வரிசைக்குச் செல்வதென்பது, வலகம்பாகு மன்னன் காட்டுக்கு போனது போல் ஓர் அனுபவமாகும். அதனால், எதிரணி எப்படி என்பது எமக்கு மட்டுமே தெரியும்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும், அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவும் 40 ஆண்டுகளுக்கு முன்னரே நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகினர்.
சிரேஷ்ட உறுப்பினர்களாக அவர்கள் இருவரும் இருக்கின்றனர். எனினும், என்னைப்போல் இவ்விருவரும் தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் அங்கம் வகிக்கவில்லை.
கொள்கை அடிப்படையில் தனது கட்சியுடன் இணைந்து எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பதவியைத் துறந்து அன்று நாடாளுமன்றத்திலிருந்து சென்றார்.
இனப்பிரச்சினையைத் தீர்ப்பது பற்றி பேசப்பட்டது. இலங்கை இந்திய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் மீண்டும் நாடாளுமன்றம் வந்தார். பயங்கரவாத பிரச்சினை காரணமாக ஒருதடவை அவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை.
அதேபோல் காமினி ஜயவிக்கிரம பெரேரா முதலமைச்சராக தெரிவாகிச் சென்றார். சிறந்த முதலமைச்சராகச் செயற்படுவது எப்படி என்று காண்பித்தார். ஒருவர் கொள்கைக்காகவும், மற்றையவர் அபிவிருத்திக்காகவும் இந்த அவையிலிருந்து சென்றனர்.
எனவே, சிங்களம், தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களையும் ஒன்றிணைத்துக்கொண்டு நாம் இலங்கையராக பயணிக்க வேண்டும். அதற்குரிய அர்ப்பணிப்பை தேசிய அரசு செய்துள்ளது.
எந்தவொரு பிரஜைக்கும் துளியளவேனும் பாகுபாடு இல்லாத வகையிலான அரசியல் தீர்வொன்றை இந்த நாடாளுமன்றத்துக்குள் அடைய வேண்டும்.
அதேபோல் பிரதான இரு கட்சிகளும் அரசில் இருக்கின்றன. எனவே, பின்நோக்கிப் பாராது, துணிவுடன் பொருளாதார வளர்ச்சியை அதிகரித்து நாட்டின் நிலையானதொரு வளர்ச்சிமிகு அபிவிருத்திக்கு அடித்தளமிடவேண்டும். இவை அனைத்தையும் செய்வதற்கான கேந்திர நிலையமாக நாடாளுமன்றத்தைப் பயன்படுத்த வேண்டும். என்றார்.