பேச்சுவார்த்தை தோல்வி: விமானப்படையினர் பயணிக்கும் வீதியை மறித்து போராட்டம்

படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டு வரும் மக்களுடன் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ள நிலையில், விமானப்படையினர் பயணிக்கும் வீதியை மறித்து மக்கள் தமது போராட்டத்தை நடத்திவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்திற்கு இன்று காலை திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர், கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர். எனினும், குறித்த பேச்சுவார்த்தையில் எவ்வித சாதகமான தீர்வும் கிடைக்கவில்லையென தெரிவித்துள்ள மக்கள், கொட்டில்களை விட்டு வெளியேறி விமானப்படைத்தளத்திற்கு முன்னால் காணப்படும் புதுக்குடியிருப்பு – வற்றாப்பளை வீதியை மறித்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

முல்லைத்தீவில் தற்போது வெயில் சுட்டெரிக்கும் நிலையில், அதனையும் பொருட்படுத்தாமல் சிறியோர் முதல் பெரியோர் வரை வயது வேறுபாடின்றி அனைவரும் வீதிக்கு இறங்கி போராடி வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

Related Posts