பேச்சுவார்த்தைகள் குறித்த சுமந்திரனின் கருத்து பிழையானது –பா.உ சஜின்வாஸ்

அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் குறித்து கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனினால் வெளியிடப்பட்ட கருத்து பிழையானது என ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைத்து அதன் மூலம் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. இவ்வாறான ஓர் சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பொறுப்பின்றி வெளியிட்டு வரும் கருத்துக்கள் பேச்சுவார்த்தைகளை குழப்பும் வகையில் அமைந்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டிய இறுதித் திகதி குறித்து எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சஜின்வாஸ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தடைகளை ஏற்படுத்தக் கூடாது. என வலியுறுத்தியுள்ளார்.

நாட்டின் அனைத்து மக்களினதும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடிய வகையிலான ஓர் தீர்வுத் திட்டத்தை எட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டுக்கு முன்னதாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டுமென அரசாங்கத்தை கோரியதாக சுமந்திரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts