பெவிலியன் வரை இஷாந்த் ஷர்மாவை விரட்டி சென்ற தம்மிக்கா பிரசாத்!! இஷாந்தின் அனல் பறந்த பந்து வீச்சில் திணறும் இலங்கை

இந்திய வீரர் இஷாந்த் ஷர்மாவுக்கும், இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்கா பிரசாத்துக்கும் நடுவே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இஷாந்த் ஷர்மா பெவிலியன் திரும்பியபோது, பிரசாத் அவரின் பின்னால் ஓடிச்சென்றது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

CRICKET-SRI-IND

இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்தியாவின் கடைசி விக்கெட்டுக்கு அஸ்வினுடன் ஜோடி சேர்ந்தார் இஷாந்த் ஷர்மா.

76வது ஓவரை இலங்கை வேகப்பந்து வீச்சாளர் தம்மிக்கா பிரசாத் வீசியபோது, இஷாந்த் அதை எதிர்கொண்டார். ஒரு ஓவருக்கு 2 பவுன்சர்கள்தான் வீச வேண்டும் என்ற விதிமுறையை மீறி தம்மிக்கா பிரசாத் தொடர்ச்சியாக 4 பந்துகளை இஷாந்துக்கு பவுன்சராக வீசினார்.

5வது பந்து சரியான உயரத்தில் வந்தது. அதை சிங்கிளுக்கு தள்ளிவிட்டு மறுமுனைக்கு ஓடிவந்த இஷாந்த் ஷர்மா, தம்மிக்கா பிரசாத்தை பார்த்தபடி தனது முன்னந் தலையில் கையை வைத்து திரும்ப திரும்ப அடித்துக்கொண்டார். “எனது தலைமீது பந்தை போட வேண்டியதுதானே..” என்று சொல்வதைபோல இருந்தது இஷாந்தின் நடவடிக்கை.

இதையடுத்து தம்மிக்கா பிரசாத், இஷாந்த் ஷர்மாவிடம் வாக்குவாதம் செய்தார். நடுவர்களும், அஸ்வினும் குறுக்கே புகுந்து இருவரையும் சமாதானம் செய்தனர். ஆனால் அதே ஓவரில் அஸ்வின் விக்கெட்டை இழக்கவே இந்திய இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

உடனடியாக இலங்கை பேட்டிங்கை தொடங்க வேண்டிய நிலை இருந்ததால், பந்து வீச்சுக்கு தயாராகும் வகையில், மைதானத்தில் இருந்து இஷாந்த் ஷர்மா வேகமாக பெவிலியன் நோக்கி ஓடினார். ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பிரசாத்தும் அவரின் பின்னால் ஓடினார்.

இருவருக்கும் நடுவே 10 அடிதான் வித்தியாசம் இருக்கும் வகையில் இந்த ஓட்டம் அமைந்தது.

இஷாந்த் ஷர்மா படிக்கட்டு வழியே ஏறிச் சென்றபோது, பிரசாத் அவரை நெருங்கிவிட்டார். வீரர்களுக்கான ஓய்வு அறையின் அருகே சென்றபோதுதான் இஷாந்த் இதை பார்த்தார். மீண்டும் இருவரும் முறைத்துக்கொண்ட நிலையில் அதிகாரி ஒருவர் குறுக்கே வந்ததால் அவரவர் தங்களுக்குறிய அறைகளுக்கு சென்றனர்.

இந்நிலையில் இந்திய பந்து வீச்சின்போது இஷாந்த் மிகவும் ஆக்ரோஷம் காண்பித்தார். இலங்கையின் முதல் விக்கெட்டாக உபுல் தரங்காவை வீழ்த்தியதும், தரங்காவிடம் சென்று ஆக்ரோஷமாக சத்தம்போட்டார்.

இதேபோல சண்டிமால் விக்கெட்டை வீழ்த்திவிட்டு, தனது முன்னந்தையில் கைகளால் அடித்து ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். இதனால் இஷாந்த் வீசிய ஓவர்களின்போது ரசிகர்கள், திக்..திக் மனநிலையில் அமர்ந்திருந்தனர்.

இலங்கை வீரர்கள் ஏன்டா இவரிடம் வம்பு வைத்தோம் என்று நினைக்கும் அளவுக்கு, இஷாந்தின் அனல் பறந்த பந்து வீச்சில் திணறினர்.

இதேபோல இஷாந்த், ஆக்ரோஷம் காட்டியதற்காக, 2வது டெஸ்டின் ஊதியத்தில் 65 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டது.

386 என்ற வெற்றி இலக்கை நோக்கித்துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி சற்று முன்வரை 90 ஒட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

Related Posts