பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் முதியோர் இல்லங்களில் பராமரிக்கப்பட்டுவரும் வயோதிபர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான சட்டத்திட்டங்களை தயாரிக்கப் போவதாக சமூக சேவைகள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க அறிவித்துள்ளார்.
முதியோர் இல்லங்களில் பராமரிக்கப்படும் வயோதிபர்கள் இறந்தவுடன் அவர்களின் உறவினர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், உயிரிழந்த வயோதிபர்களின் சொத்துகளுக்காக முரண்பட்டுக்கொள்ளும் சம்பவங்கள் சமூகத்தில் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளதாக அமைச்சர் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் இந்த சொத்துத் தகராறுகள் அதிகமாக காணப்படுவதாக சமூக சேவைகள் திணைக்கள அதிகாரிகள் தம்மிடம் எடுத்துக் கூறியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பத்தரமுல்லை பகுதியிலுள்ள எமது கிராமம் வளாகத்தில் நடைபெற்ற மாகாண சபைகளின் சமூக சேவைகள் அமைச்சர்களுடனான மாநாட்டிலேயே அமைச்சர் இந்தத் தகவல்களைத் தெரிவித்திருக்கின்றார்.
வீதிகளில் அநாதரவாக கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு சமூக சேவைத் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் முதியோர் இல்லங்களுக்கு அழைத்துவரப்படும் முதியோர்களுக்கு உறவினர்கள் இருக்கின்றனரா என்பது குறித்து முதலில் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை வீதிகளில் இருந்து காப்பாற்றப்படும் வயோதிபர்களின் புகைப்படங்களை பத்திரிகை வாயிலாக பிரசுரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள அமைச்சர், இவ்வாறு செய்யும் போது சம்பந்தப்பட்ட முதியவருக்கு உரிமை கோராத உறவினர்கள், அவரது சொத்துகளுக்கு உரிமை கோர இடமளிக்காது தடுக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.