பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை, நிலையான, மிகவும் அர்த்த பூர்வமான சுதந்திரமாக மாற்றிக் கொள்ளும் பொறுப்பு தற்போது நம் அனைவர் மீதும் உள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (04) நாட்டின் அனைத்து மக்களாலும் அனுஷ்டிக்கப்பட்டு வரும் 68 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு வௌியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இவ் வாழ்த்துச் செய்தியில் மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
ஒழுக்க நெறி மிக்க தேசமாக எமது நாட்டை உயர்த்தி “ஒரே நாடு – பாரிய பலம்” என்ற அடிப்படையில் அனைத்து மக்களையும் ஐக்கியப் படுத்திய நிலையில் 68 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடக் கிடைத்தமையானது நாம் பெற்றுக் கொண்ட வெற்றியாகும்.
காலனித்துவத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்க அனைத்து மக்கள் பிரிவினரையும் ஒன்றிணைத்து முன் நின்று செயற்பட்டது போன்று, மக்களின் ஜனநாயக உரிமைகள், உரித்துடைமைகளை அடக்கியொடுக்கி, சர்வதேச ரீதியாக நாடு அபகீர்த்திக்கு உட்பட்டுக் கொண்டிருந்த இருண்ட காலப்பகுதியில் சர்வாதிகாரத்திலிருந்தும், குடும்ப ஆட்சியிலிருந்தும் நாட்டை மீட்டெடுக்க நாம் முன்நின்று செயற்பட்டோம்.
அதன் மிகச் சிறந்த பெறுபேறு கடந்த ஆண்டு ஜனவரி 08 ஆந் திகதி பெற்றுக் கொண்ட வெற்றியாகும். அவ்வாறு பெற்றுக் கொண்ட வெற்றியை சுதந்திரத்தினை நாமனைவரும் ஒன்றிணைந்து அர்த்தபூர்வமானதாக மாற்ற வேண்டும். அதற்காக வேண்டி இன, மத, கட்சி பேதமின்றி இலங்கை மக்கள் அனைவரோடும் கைகோர்த்து செயற்படுவது தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.
மனித உரிமைகளைப் பாதுகாக்கும், சுதந்திரமான, கௌரவம் மிக்க நாடாக எமது தனித்துவத்தை சர்வதேசத்தின் முன்னே நாம் மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறோம். சட்டம், ஒழுங்கு மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாத்து, முன்னேற்றகரமான சமூக, பொருளாதார சூழலில் நாட்டைக் கட்டியெழுப்பும் பாரியபணி நம் முன்பே உள்ளது.
இந்த மொத்த செயற்பாட்டிலும் தமது வகி பாகத்தை ஒழுங்காக விளங்கி தேசத்தின் முன்னேற்றத்திற்காக உண்மையான பிரஜைகளாக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதை இச்சுதந்திரதினத்தில் விசேடமாக மனதில் கொள்வோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.