நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இன்று நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் இன்று மாலை 5 மணிவரையான நிலவரப்படி ராஜபகசக்களின் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி 73 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது.
வடக்கு – கிழக்கில் யாழ்ப்பாணம், திகாமடுல்ல மாவட்டங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
9ஆவது நாடாளுமன்றத் தேர்தல் 22 தேர்தல் மாவட்டங்களில் நேற்று நடந்தது. ஏறக்குறைய 1.60 கோடி மக்கள் தங்கள் வாக்கைப் பதிவு செய்தனர். மக்கள் சுகதாார விதிமுறைகளை முறையாகக் கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க 8 ஆயிரம் சுகாதாரக் கண்காணி்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
இலங்கை நாடாளுமன்றத்தில் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 196 பேர் மக்கள் மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மீதமுள்ளவர்கள் கட்சியின் வாக்குவீதத்துக்கு ஏற்றார்போல் தேர்வு செய்யப்படுவார்கள்.
கோரோனா வைரஸ் பரவல் அச்சத்துக்கு மத்தியில் உலகில் முதல்முறையாக தேர்தல் நடத்திய நாடு எனும் பெருமையை இலங்கை பெற்றது.
இன்று காலை முதல் 64 வாக்கு எண்ணிக்கை நிலையங்களில் இருந்து வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. பிற்பகலுக்கு பின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் படிப்படியாக வெளியிடப்படுகிறது.
அதன்படி முதல்கட்டமாக ஆளும் ராஜபகசக்களின் கோட்டைகளான தென் மாகாணத்தின் காலி, மாத்தறை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு முடிவுகள் வெளியாகின. இதில் மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி 70 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
புதிதாக கட்சி தொடங்கி தேர்தலில் நின்ற சஜித் பிரேமதாசவின் ஐக்கிய தேசியக் கட்சி(யுஎன்பி) 4-வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.
தமிழர் தாயகத்தில் யாழ்பாணம் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ராஜபக்சவின் கட்சியுடன் இணைந்து செயற்படும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு யாழ்ப்பாணத்தில் வழமையைவிட அதிகளவு வாக்குகள் கிடைத்துள்ளன.
அத்தோடு யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் வாக்கு வங்கியை அதிகரித்துள்ளது.