பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றால் வடக்கில் படைகளை வெளியேற்றுவோம் – சி.வி.விக்னேஸ்வரன்

vicknewaran-tnaவடமாகாண சபைத் தேர்தலில் மொத்தமாக உள்ள 36 ஆசனங்களில் 30 ஆசனங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றால் அப்பெரும்பான்மையை வைத்துக்கொண்டு இராணுவத்தை வடக்கில் இருந்து வெளியேற்ற முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளரான இளைப்பாறிய நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து வடமராட்சி, அல்வாய் மாலி சந்தி, மைக்கல் மைதானத்தில் நேற்று மாலை மாபெரும் பிசாரக் கூட்டம் நடைபெற்றது.

கரவெட்டிப் பிரதேச சபைத் தவிசாளர் பொ.வியாகேசு தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் கூறியதாவது:

வடமராட்சிப் பிரதேசம் அறிவுக்குப் பெயர் போனது, இப் பிரதேச மக்கள் அறிவில் நம்பிக்கை கொண்டவர்கள். சதாவதானி, அட்டாவதானிகள் பிறந்த பிரதேசம் இது.

அன்றைய காலத்தில் வேற்றுமைக்கு இடம்கொடுத்தோம். அதனால் செல்வநாயகமா, பொன்னம்பலமா என அன்று பிரிந்து நின்றோம். அந்த வேற்றுமைகளை இக்காலத்தில் களைந்து அறிவு மூலம் ஒன்று படுவோம்.

வடமாகாண சபைத் தேர்தல் மூலம் நாம் தமிழர்கள் என உலகுக்கு எடுத்துச்சொல்ல நல்ல சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய பிரதேசங்களான ஐம் மண்களைக் கொண்ட வடக்குத் தமிழ் மக்களை கொண்ட தனி அலகாகும். இத் தனி அலகு தமிழர்களுடையது என இத்தேர்தல் மூலம் உலகுக்குச் எடுத்துச் சொல்ல வேண்டும்.

போரின் பின்னர் ஜனநாயக முறைப்படி எமது பிரதிநிதிகளை நாம் தெரிவு செய்வோம். இத்தேர்தலில் பாரம் பரியம் மிக்க மக்களின் அன்புக்கு பாத்திரமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக அரசின் அடிவருடிகள் போட்டியிடுகிறார்கள்.

அரசோடு சேருங்கள் அதனால் நன்மைகள் பல பெறலாம் என அரச அடிவருடிகள் கூறுகின்றார்கள். இதனால் அரசுக்கு நன்மையே தவிர தமிழ் மக்களுக்கு அல்ல என்பதை எம் மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். அரசுடன் இணையும் மக்களைப் பற்றிய எண்ணம் அரசுக்கு கிடையாது. இராணுவம் இருப்பதால் தமிழ் மக்களின் நிலையில் மாற்றம் அடைகிறது. தமிழ் மக்களின் கலை , கலாசார, பாரம்பரிய விழுமியங்கள், கல்வி என்பன சீரழிக்கப்படுகின்றன.

பெண்களின் நிலையும் மோசமடைகின்றது. தமிழ் மக்களின் குடியிருப்புகளும் பாதிக்கப்படுகின்றன. நான் சிறுவனாக இருக்கும் போது திருகோணமலையில் மூன்றில் ஒரு பகுதி சிங்களவர்களே இருந்தார்கள். இன்று அவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. அந்த அளவுக்கு சிங்கள குடியேற்றம் அதிகரித்துள்ளது.

எனவே அதிக பெரும்பான்மையை இத்தேர்தலில் பெற்றுக்கொண்டால் தமிழர்களின் கோரிக்கைகளை உலகறியச் செய்ய முடிவதுடன் இராணுவத்தையும் வடக்கிலிருந்து வெளியேற்றலாம் என்றார்.

இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஆகியோர் உட்பட பலரும் உரையாற்றினார்கள்.

Related Posts