பெயர்ப்பலகையில் முதலிடத்திலிருந்த தமிழ்மொழி இரண்டாவது இடத்துக்கு மாற்றம்!!!

மன்னாரில் பனை அபிவிருத்திச் சபையின் கீழான பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் பெயர்ப்பலகையில் முதல் வரியிலிருந்த தமிழ்மொழி அமைச்சர் விமல் வீரவன்சவின் பணிப்பில் இரண்டாவது வரிக்கு மாற்றப்பட்டு சிங்களமொழி முதல் வரியில் இடம்பிடித்துள்ளது.

வடக்கு – கிழக்கு கடந்த ஒருவாரம் பயணம் மேற்கொண்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்துறை மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச, தலைமன்னாரில் பனந்தும்பு உற்பத்தி நிலையத்தினைத் திறந்து வைத்தார்.

அமைச்சர் விமல் வீரவன்ச, பனந்தும்பு உற்பத்தி நிலையத்தினைத் திறந்து வைத்து பெயர்ப்பலகையை திரைநீக்கம் செய்த போது, பெயர்ப்பலகையில் தமிழ்மொழி முதல் வரியில் இருந்தது. சிங்களமொழி இரண்டாவது வரியில் இருந்தது.

இந்த திறப்புவிழா ஒளிப்படங்களை அமைச்சர் விமல் வீரவன்ச, தனது முகநூலில் பதிவிட்ட போது, பெயர்ப்பலகையில் முதல்வரியில் தமிழ்மொழி காணப்பட்டதால், பேரினவாதிகள் பல்வேறு இனவெறிக் கருத்துக்களை பதிவிட்டனர்.

இதனால் பனந்தும்பு உற்பத்தி நிலையத்தின் பெயர்ப்பலகையில் முதல் வரியிலிருந்த தமிழ்மொழி அமைச்சர் விமல் வீரவன்சவின் பணிப்பில் இரண்டாவது வரிக்கு மாற்றப்பட்டு சிங்களமொழி முதல் வரிக்கு நேற்று திங்கட்கிழமை மாற்றப்பட்டுள்ளது.

பெயர் பலகையில் மாற்றம் செய்ததனை தனது சமூக வலைத்தளத்திலும் அமைச்சர் பதிவேற்றியுள்ளார்.

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் பெயர்ப்பலகையில் தமிழ்மொழி முதலிடத்தில் காணப்பட்டதால் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் விமல் வீரவன்ச பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் மன்னாரில் பனை அபிவிருத்திச் சபையின் கீழான தொழிற்சாலை பெயர்ப்பலகையில் தமிழ்மொழி முதலிடத்தில் காணப்பட்டதால் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஆதரவாளர்கள் உள்பட பேரினவாதிகள் பெரும் சர்ச்சையை எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts