பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!!

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் புறநகர்ப் பகுதியில் உள்ள டோல்கேட் அருகே கடந்த 27-ம் தேதி இரவு கால்நடை பெண் டாக்டர், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் சேர்லாப்பள்ளி சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இந்நிலையில், பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை விரைவாக விசாரித்து, கடுமையான தண்டனை வழங்கவும், வழக்கை விசாரிக்க விரைவு நீதிமன்றத்தை அமைக்கவும் தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர ராவ் அறிவித்தார்.

இதற்கிடையே இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் ஒரு பகுதியாக, சம்பவம் நடந்த இடத்திற்கு குற்றவாளிகளை அழைத்து சென்று எப்படி கொலை செய்தனர் என்பதை நடித்து காட்டச் செய்தனர். அப்போது 4 பேரும் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றதாக தெரிகிறது. இதனால் 4 பேரும் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் 4 பேரும் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts