பெண் நிர்வாணமாக கழுதை மீது ஏற்றி ஊர்வலம்

ராஜஸ்தான் மாநிலம் ராஹ்சமாந்த் மாவட்டத்தின் ஒரு பழங்குடி பகுதியில், ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர்களின் உத்தரவின் பேரில் பெண் ஒருவர் நிர்வாணமாக கழுதை மீது ஏற்றப்பட்டு ஊர்வலமாக அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிர்வாண ஊர்வலம் அனுப்பப்பட்ட பெண் பொலிஸ் பாதுகாப்பில் வந்துள்ளார்.
நிர்வாண ஊர்வலம் அனுப்பப்பட்ட பெண் பொலிஸ் பாதுகாப்பில் வந்துள்ளார்.

45 வயதான அந்த பெண்ணுக்கு மொட்டையடிக்கப்பட்டு, அவரது முகத்தில் கரி பூசப்பட்டு பின் நிர்வாணப்படுத்தப்பட்டு அவரை கழுதை மீது ஏற்றி கிராமத்தில் ஊர்வலமாக சுற்றி வரும்படி செய்தாக புகார் எழுந்திருக்கிறது.

தனது நெருங்கிய உறவினர் ஒருவரை அந்த பெண் கொலை செய்ததாக கூறப்படும் குற்றத்திற்காக அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் காவல் துறையினர் இதுவரை அந்த கிராமத்தை சேர்ந்த 39பேரை கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் குறிப்பாக வட இந்திய மாநிலங்களின் கிராமப்புறங்களில் இந்திய அரசியல் சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத கிராம பஞ்சாயத்துகள் வலுவாக செயல்பட்டு வருகின்றன.

கடந்த நவம்பர் மாதம் இரண்டாம் தேதியன்று இந்த சம்பவம் நடந்த துரவாத் கிராமத்தில் வாழ்ந்த வர்டி சிங் என்ற 45 வயது நபர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இறந்தவரின் இறுதிச் சடங்குகள் முடிந்து மூன்று நாட்களுக்குப் பிறகு இறந்தவரின் மனைவி மற்றும் வேறு சில உறவினர்களுக்கு அவரது மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளது.

தற்போது தண்டனை வழங்கப்பட்ட பெண் இறந்தவரின் அத்தை ஆவார்.

வர்டி சிங் அவரது அத்தையால் தான் கொல்லப்பட்டார் என்று குற்றஞ்சாட்டி இறந்தவரின் மனைவி மற்றும் வேறு சில உறவினர்கள் காவல்துறையை அணுகியுள்ளனர்.

இதனிடையே இந்தச் குற்றச்சாட்டை அவர்கள் உள்ளூர் கிராமப் பஞ்சாயத்திடமும் கொண்டு சென்றுள்ளனர்.

இறந்தவரின் அத்தை தான் குற்றவாளி என்று அந்த பஞ்சாயத்து தலைவர்கள் தீர்ப்பளித்ததாக கூறப்படுகிறது.

இது போல தவறு செய்ததாக குற்றம் சுமத்தப்படும் பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் சம்பவங்கள் இந்தியாவில் தொடர்ந்து நடப்பதாக சமீப காலங்களில் செய்திகள் வெளியாகிவருகின்றன.

பொதுவாக சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் பின்தங்கிய பெண்களுக்குத் தான் இவ்வகையான அவமானப்படுத்தும் தண்டனைகள் வழங்கப்படுகிறது என வழக்கறிஞரும் பெண்ணியவாதியுமான அருள் மொழி தெரிவித்துள்ளார்.

Related Posts