பெண் சமூகத்தை இழிவுபடுத்தியவர்கள் பதவி நீக்கப்பட வேண்டும்: இலங்கை ஆசிரியர் சங்கம்

ஆசிரிய சமூகத்துக்கும், பெண்கள் சமூகத்திற்கும் தலைகுனிவை ஏற்படுத்திய ஊவா மாகாண முதலமைச்சரினதும், கல்வி அதிகாரிகளினதும் பதவிகள் பறிக்கப்பட வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இக்கோரிக்கையை முன்னிறுத்தி பாரிய கண்டன ஆர்ப்பாட்டமொன்றை நடத்தவும் இலங்கை ஆசிரியர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய எதிர்வரும் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஹற்றன் பேரூந்து நிலையத்திற்கு அருகில் பிற்பகல் 2.30 மணிக்கு இக்கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

கல்விச் சமூகத்தையும், பெண்கள் சமூகத்தையும் கீழ்த்தரமாக அவமானப்படுத்திய முதலமைச்சர், மாகாணகல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோரை உடனடியாக பதவிநீக்குமாறும், அவர்களை உடனடியாக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்துமாறு கோரியே இவ் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

புதுளை தமிழ் மகளிர் வித்தியாலய அதிபரை ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் மூலம் ஊவா மாகாண முதலமைச்சர் தன்னுடைய இல்லத்திற்கு அழைப்பித்துள்ளார். அங்கு, பாடசாலையில் ஒரு மாணவரை அனுமதிக்காமைக்காக அதிபரை பலவந்தமாக முழங்காலில் மண்டியிட வைத்து மன்னிப்புக்கோரச் செய்துள்ளார்.

இச்சம்பவம் ஊடகங்களில் வெளியாகி எதிர்ப்புகள் கிளம்;பியதால் கடந்த 9ம் திகதி சம்பந்தப்பட்ட அதிபரை மாகாண கல்வி அமைச்சுக்கு அழைத்து அமைச்சின் செயலாளர் ஊவா மாகாணகல்விப் பணிப்பாளர் பதுளைவலயக் கல்விப் பணிப்பாளர் ஆகியோர் மறுப்பு அறிக்கையொன்றை அதிபரை வற்புறுத்தி ஊடகங்களுக்கு வழங்கச் செய்துள்ளனர்.

இவற்றையும் மீறிதொழிற்சங்கங்கள், பெண்கள் அமைப்புகள் உட்பட அரச சார்பற்ற நிறுவனங்கள் மூலம் உண்மைச் செய்திகள் ஊடகங்களில் வெளியானதால் ஊவா மாகாணகல்வி அமைச்சின் செயலாளரும் வேறு அதிகாரிகளும் மீண்டும் பதுளை தமிழ் மகளிர் வித்தியாலத்திற்குச் சென்று அதிபரை அச்சுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts