பெண் ஊடகவியலாளருக்கு வடமாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக இணைப்பாளரால் அச்சுறுத்தல்!!

வடமாகாண சபை உறுப்பினர் ஒருவரின் ஊடக இணைப்பாளர் என அறிமுகப்படுத்திய ஒருவர் தொலைபேசி ஊடாக தன்னை அச்சுறுத்தினார் என யாழில் உள்ள பெண் ஊடகவியலாளர் ஒருவர் யாழ். காவல்நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். அதேவேளை எதிர்வரும் 30ஆம் திகதி தமிழ் மக்கள் அதிரும் படியான செய்தி வரும் , அதை பிரசுரிக்க தயாராக இருங்கள் எனவும் தொலைபேசி ஊடாக தெரிவித்துள்ளார் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வடமாகாண சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் ஒருவர் தொடர்பான செய்தி வெளிவந்து இருந்தது.

குறித்த செய்தியானது தனக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருந்தது எனவும் , அந்த செய்தி உண்மைக்கு புறம்பான செய்தி எனவும் காவல் நிலையத்தில் முறைபாடு செய்திருந்தார்.

ஆத்துடன் குறித்த உறுப்பினரின் ஆதரவாளர்கள் சிலர் ஒன்றிணைந்து உறுப்பினர் தொடர்பிலான செய்தி வெளிவந்த பத்திரிகையின் பிரதிகள் சிலவற்றையும் , அப்பத்திரிக்கை பிரதி போன்று பெரியளவில் பிரதி செய்யப்பட்டதையும் தீயிட்டு கொளுத்தி போராட்டம் நடாத்தி இருந்தனர். அந்நிலையில் குறித்த போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் உறுப்பினருக்கு எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடாத்தி உறுப்பினரின் உருவ பொம்மையை எரித்தனர்.

அவை தொடர்பிலான செய்தியையும் குறித்த பத்திரிக்கை வெளியிட்டு இருந்தது. அதன் பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை 14ஆம் திகதி வடமாகாண சபை உறுப்பினரின் ஆதரவாளர்கள் சிலர் மீண்டும் குறித்த பத்திரிகைக்கு எதிராக போராட்டம் நடாத்தினார்கள்.

அந்த போராட்டம் தொடர்பிலான செய்தியினை குறித்த பத்திரிகை பிரசுரிக்கவில்லை. அது தொடர்பில் குறித்த மாகாண சபை உறுப்பினரின் ஊடாக இணைப்பாளர் என தன்னை அறிமுகப்படுத்திய நபர் குறித்த பத்திரிகையின் அலுவலக செய்தியாளருக்கு தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு ஏன் அந்த போராட்டம் தொடர்பிலான செய்திகளை வெளியிடவில்லை என கேட்டுள்ளார்.

அதற்கு செய்தியாளர் , அது தொடர்பில் பிரதம ஆசிரியரிடம் கேளுங்கள் என பதிலளித்துள்ளார். அதற்கு அந்நபர் ‘நீங்கள் முதலமைச்சர் சொல்வதனை கேட்டு எழுதிக்கொண்டு இருங்கோ .. 30ஆம் திகதி யாழ்ப்பாணமே அதிருகிற மாதிரி ஒரு சம்பவம் நடக்கும். அதனை எழுத தயாராக இருங்கள்’ என அச்சுறுத்தி உள்ளார்.

குறித்த அச்சுறுத்தல் தொடர்பில் யாழ். காவல் நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை குறித்த அலுவலக செய்தியாளர் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை முறைப்பாடு செய்தமை தொடர்பில் ஊடகவியலாளர் தெரிவிக்கையில் ,தொலைபேசி ஊடாக எனக்கு அச்சுறுத்தியமையை விட எதிர்வரும் 30ஆம் திகதி யாழ்ப்பாணமே அதிர்கிற மாதிரி சம்பவம் நடக்க போவதாக கூறியுள்ளார். எனவே ஏதேனும் பெரியளவிலான சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கிறேன்.

ஏனெனில் அன்றைய நாளில் தான் யாழில் இருந்து முஸ்லீம் மக்கள் வெளியேற்றப்பட்ட நாளாகும். அதனால் அந்த சம்பவத்தினை அடிப்படையாக கொண்டு இனக்கலவரத்தை தூண்டு செயலில் அவர்கள் ஈடுபட்டு உள்ளனரா எனும் சந்தேகமும் எழுந்ததால் தான் அது தொடர்பில் முறைப்பாடு பதிவு செய்தேன்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு நான் சந்தேகிப்பது போல் ஏதேனும் சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளனவா என்பதனை கண்டறிய வேண்டும் என தெரிவித்தார்.

Related Posts