பெண்பிள்ளைகளைப் பெற்றவர்கள் தமது பிள்ளைகளை வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களுக்கு திருமணம் முடித்து வைக்கவே விரும்புகின்றனர்.

“இது போர்க்காலம் இல்லை. வழமை நிலை திரும்பியுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் மீண்டும் எம்மவர் வெளிநாடு செல்ல வேண்டுமா என்று கேள்வி எழுகின்றது. எல்லோரும் வெளியேறத் தலைப்பட்டால் வேற்று இனத்தவர்கள் வந்து இங்கு குடியேறுவதை நாம் எப்படி தடுக்க முடியும்? எமது மக்கள் இங்கு நிலைத்து நின்று சாதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

பல நெருக்கடியான காலங்களில் கூட தமது ஒழுக்க நிலைகளில் இருந்து பின்வாங்காத எமது சமூகம் தற்போது பலவிதமான சீரழிவுக்கு உட்பட்டிருப்பது மனவருத்தத்தை தருகின்றது. இந்த நிலமைகள் மாற்றப்பட வேண்டும். மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். வெளியே செல்ல இருக்கும் பல மாணவர்கள்தான் வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுழிபுரம் வெண்கரம் அமைப்பின் தமிழ் மக்கள் கூட்டணியும் இணைந்து முன்னெடுத்த கல்வி வழிகாட்டல் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:

வெண்கரம் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறுகின்ற இந்த நிகழ்வில் எமது கட்சியும் கலந்துகொண்டுள்ளது. சமூகத்தின் அடிமட்டத்தில் இருக்கும் வறிய மாணவ சமுதாயத்தின் மீது இருக்கும் எமது கரிசனையே எங்களை ஒன்றுபட்டு செயல்பட வைத்துள்ளது.

வடமாகாண கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற மாணவ மாணவியர்களுக்கான சில வழிகாட்டல்களையும்,கற்றல் வழிமுறைகளையும் இத்தருணத்தில் தெரிவிக்கலாம் என்று எண்ணுகின்றேன்.

இந்த நாட்டில் ஏற்பட்ட 30 ஆண்டுகளுக்கு மேலான தொடர் போரின் காரணமாக தமிழ் மக்களின் கலை, கலாச்சாரங்கள் வாழ்வியல் விழுமியங்களில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதுடன் மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன.

இளைய தலைமுறையினரில் பலர் உயிர் அச்சுறுத்தலுக்குப் பயந்து தமது கல்விச் செயற்பாடுகளை இடைநிறுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கும் பிற நாடுகளுக்கும் நகரத் தொடங்கிவிட்டனர். மேற்படி நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களில் கல்விப் பின்புலத்துடன் சென்றவர்கள் நல்ல நிலைமைகளில் இருக்கின்றபோதிலும் ஏனையவர்கள் கஷ்டமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதை நாம் அவதானித்திருக்கின்றோம்.

அப்படி இருந்தும் தமது உறவினர்களுக்கும் ஏனையவர்களுக்கும் அவர்களே பலவித உதவிகளைச் செய்து வருகின்றனர். எனினும் இங்குள்ள மக்களின் மனோநிலையை நாம் அறிந்து கொள்ள வேண்டும். பிள்ளைகளைப் பெற்றபெற்றோர்களும் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவதிலேயே குறியாக இருக்கின்றார்கள்.

பெண்பிள்ளைகளைப் பெற்றவர்கள் தமது பிள்ளைகளை வெளிநாடுகளில் உள்ள இளைஞர்களுக்கு திருமணம் முடித்து வைக்கவே விரும்புகின்றனர். இவ்வாறு வெளியே செல்லும் சில குடும்பங்கள் சந்தோஷமாக இருக்கின்றன. பலர் தூண்டிலில் அகப்பட்ட மீன்களாக தமது நிலையில் இருந்து விடுபட முடியாமலும் அதே நேரம் மன அமைதியின்றியும் வாழ்கின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் எந்த வழியிலாவது பணத்தைத் தேடிக்கொள்ள வேண்டும் என்ற அவாவில் தாங்களே தங்களது பிள்ளைகளைப் பலிக்கடாக்களாக மாற்றுவதைப் பற்றிப் பல பெற்றோர்கள் சிந்திப்பதில்லை. இது போர்க்காலம் இல்லை. வழமை நிலை திரும்பியுள்ள இந்தச் சந்தர்ப்பத்தில் மீண்டும் மீண்டும் எம்மவர் வெளிநாடு செல்ல வேண்டுமா என்று கேள்வி எழுகின்றது.

எல்லோரும் வெளியேறத் தலைப்பட்டால் வேற்று இனத்தவர்கள் வந்து இங்கு குடியேறுவதை நாம் எப்படி தடுக்க முடியும்? எமது மக்கள் இங்கு நிலைத்து நின்று சாதிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். பல நெருக்கடியான காலங்களில் கூட தமது ஒழுக்க நிலைகளில் இருந்து பின்வாங்காத எமது சமூகம் தற்போது பலவிதமான சீரழிவுக்கு உட்பட்டிருப்பது மனவருத்தத்தை தருகின்றது.

இந்த நிலமைகள் மாற்றப்பட வேண்டும்.மாணவர்களிடையேயும் பெற்றோர்களிடையேயும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியமாகும். வெளியே செல்ல இருக்கும் பல மாணவர்கள் தான் வாள்வெட்டுச் சம்பவங்களில்ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு வெளிநாட்டுப்பணம் வருகின்றது. அத்துடன் வெளியே செல்ல வாய்ப்பும் கிடைக்கின்றது. வெளியே செல்லும் வரையில் பலவிதமான தப்பான காரியங்களில் எம் இளைஞர்கள் ஈடுபடுவதாக அறிகின்றோம்.

எனவே இளையோர்களின் சிந்தனைகள் சிதறிவிடப்படாமல் பாதுகாப்பதற்கு அவர்கள் அதிகளவு நேரங்கள் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். கண்டது கற்கப் பண்டிதன் ஆவான் என்பது பழமொழி. ஆனால் கூடுதலான பெற்றோர்கள் தமது பிள்ளைகளை உயர்கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்வதற்கு அவர்களின் பொருளாதார நிலமைகள் இடையூறாகக் காணப்படுகின்றது.இதனால் அவர்கள் தமது பிள்ளைகளைப் பற்றிய கல்வி ரீதியான விருப்பங்களை பூர்த்தி செய்ய முடியாது அல்லல் படுகின்றனர். பிள்ளைகளும் ஏனோ தானோ என்று வளர்ந்து வருகின்றார்கள்.

கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட வயதில் வழங்கப்பட வேண்டியதொன்று. இளமையிற் கல் என்றார் ஒளவையார். காலம் தப்பிக் கற்பவர்கள் வெகு சிரமப்பட்டே தமது கல்வி நடவடிக்கைகளை நிறைவு செய்கின்றனர்.

சுமார் 70 வருடங்களுக்கு முன்பு நாம் கற்ற கல்வி முறைமைக்கும் இப்போதைய கல்வி முறைமைக்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு. எமது காலத்தில் கல்வி கற்பதும் விளையாடுவதுமே எமது பொழுதுபோக்கு. வானொலி இருந்தது ஆனால் தொலைக்காட்சி சாதனம் இல்லை. கணனி இல்லை. போதைப் பொருள் இல்லை.அதனால் நிறையப் புத்தகங்களை ஆங்கில மொழியிலும், தமிழ்மொழி மூலமாகவும் வாசிக்கக் கூடியதாக இருந்தது.

வாசிப்புப் பழக்கம் ஒரு மனிதனை முழுமையடையச் செய்யும் என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்.

ஆகவேதான் நான் கூறுகின்றேன் – நீங்கள் இயலக் கூடிய அளவு வாசிப்புக்காக நேரத்தை ஒதுக்குங்கள் என்று. வாசிப்பில் ஈடுபட ஈடுபட உங்கள் மொழி அறிவு விருத்தியடையும். பல் அறிவும் மேம்படும். எமது காலத்தில் ஆங்கில மொழிக் கல்வி வழக்கில் இருந்ததால் நாம் ஆங்கில மொழியை இலகுவாகக் கற்றுக் கொண்டோம். உங்களுக்கு அந்தச் சந்தர்ப்பம் முறையாக் கிடைக்கவில்லை. நான் என் கல்வி அனைத்தையும் ஆங்கிலத்திலேயே செய்தவன். எனக்கு முன்னைய மாணவரான பேராசிரியர் ஏ.டபிள்யூ மயில்வாகனம் அவர்கள்தான் எமது கல்லூரியில் படித்த காலத்தில் அதாவது 1935 தொடக்கம் 1945ம் ஆண்டு வரையில் தமிழில் பேசினால் பிரம்படி கிடைக்கும் என்று கூறினார்.

இன்று ஆங்கில மொழிமூல கற்கையில் ஈடுபட்டிருபவர்களும் மேலதிக விளக்கங்களை தமிழிலேதான் பெற்றுக் கொள்கின்றனர். ஆங்கிலத்தை முறையாகக் கற்பிப்பதற்கு ஆசிரியர் தட்டுப்பாடு ஒரு பெரும் பிரச்சனை. நான் முதலமைச்சராகக் கடமையாற்றிய காலத்தில் ஆங்கிலம் கற்பிப்பதற்கு ஒப்பந்த அடிப்படையில் இங்கிலாந்தில் இருந்தோ அல்லது இந்தியாவில் இருந்தாவது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குக் கடமையாற்ற ஆசிரியர்களை தருவிப்பது பற்றி பிரஸ்தாபித்திருந்தேன்.

ஆனால் கல்வித்துறைக் கொள்கைகளில் மாற்றங்களை செய்வதற்கு மாகாண அமைச்சுக்கு அனுமதி கிடைக்கப் பெறாமையால் அது கைகூடவில்லை. எனினும் எமது அலுவலர்கள் பலரை தேர்ச்சி பெறச் செய்தேன்.

ஆகவே எங்கள் மாணவர்கள் முதலாவதாக மொழி அறிவைத் தேடிக் கொள்ளவேண்டும். அடுத்ததாகத் தமது கல்விக்காக சரியான துறைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுக்கின்ற துறையினூடாக ஓய்வு பெற்ற பின்பும் கடமையாற்றக் கூடிய தொழில்களைத் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக மருத்துவத் துறை, சட்டத்துறை தொழில், பொறியியல்த்துறை, நில அளவை,படவரைஞர் தொழில், ஆங்கில ஆசிரியர் தொழில் ஆகிய துறைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படக்கூடியன.

இதேபோன்று இன்னும் பல தொழில்களை நீங்கள் தெரிவு செய்யலாம். என்ன தொழிலாக இருந்தாலும் அதில் ஒரு பற்றுதியும் முயற்சியும் தேவை. இவை சரிவரக் கிடைக்கப் பெற்றால் வாழ்வு இனிதாக அமையும். கல்வி ஒருவனை முழுமையடையச் செய்கின்றது. கல்வியால் ஒருவனின் பார்வையானது குறுகியதாக இராது பரந்துபடுகின்றது.

ஒரு குளத்தில் தவளை ஒன்று இருந்தது. ஒரு நாள் நிலத்தில் வாழும் தவளை ஒன்று கிணத்தில் விழுந்து விட்டது. புதிய தவளையிடம் பழைய தவளை கேட்டது “நீ எங்கிருந்து வருகிறாய்”என்று “நான் வெளியுலகத்தில் இருந்து வருகின்றேன்” என்றது புதிய தவளை. “உன் வெளியுலகம் எனது கிணற்றுலகம் போல் இவ்வளவு அகன்றதாகவும் பரந்ததாகவும் இருக்குமா?” என்று கேட்டு பழைய தவளை கிணற்றின் ஒரு பக்கத்தில் இருந்து மறு பக்கத்திற்குப் பெருமையாக குதித்துக் கேட்டது. புதுத் தவளை சிரித்தது.

“உனக்குத் தெரிந்தது இந்தக் கிணறு தான். நான் வாழ்ந்தது உலகம். இதைப் போல் எவ்வளவோ பெரியது அது” என்றது. ஆனால் பழைய தவளைக்கு அது விளங்கவில்லை. அது எப்படி என் கிணற்றிலும் பார்க்க பரந்த அகன்ற ஒரு இடம் இருக்க முடியும் என்று சிந்தித்தது. ஆனால் அதனால் அவ்வாறான நிலத்தை, சூழலை கற்பனை செய்து பார்க்கக் கூட முடியவில்லை. அப்படித்தான் கல்வியுடையவனுக்கும் கல்வி இல்லாதவனுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசம். படித்தால் பலதையும் விளங்கிக் கொள்ள முடியும்.

படிப்பில்லாதவருக்கு ஒரு சில விடயங்கள் மட்டும் தெரியும், புரியும்.
வெளிநாடுகளுக்கு நாங்கள் பயணித்து வதிவது என்பது எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் எனக்கூற முடியாது. அந்த நாடுகளில் அரசியல் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றபோது அந்த நாடுகளில் உள்ள வெளிநாட்டவர்கள் திருப்பி அனுப்பப் படுவதற்குக்கூட வாய்ப்புக்கள் உண்டு. எனவே எமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பாமல் எமது நாட்டிலே எமது பிள்ளைகள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதற்கு வழிவகைகள் செய்து தரப்பட வேண்டும்.

இவ்வாறான சூழலில் வெண்கரம் அமைப்பு பாடசாலை மாணவர்களுக்கு இலவச பிரத்தியேக கல்விகளை வழங்க முன்வந்திருப்பது மகிழ்விற்குரியது. இது ஒரு பிரத்தியேகக் கல்வி நிலையம். அதன் நடவடிக்கைகளில் நீங்கள் ஈடுபடலாமோ என்று ஒருவர் கேட்டார். நான் கூறினேன் -“எனக்குத் தேவையானது எமது மாணவ சமுதாயத்தின் வளர்ச்சி. அவர்கள் எவ்வாறான மாணவர்கள், யார் பராமரிக்கும் மாணவர்கள் என்பது எனக்கு ஒரு பொருட்டல்ல. தமிழர்களின் மாணவ சமுதாயம் மறுமலர்ச்சி பெற வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு. யார் அந்த மாணவர்கள் என்பது தேவையற்றது” என்றேன்.

இந்த அமைப்பில் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற ஆசிரியர்கள் முழுநேரக் கடமைகளில் ஈடுபடுவதால் அவர்களுக்கு ஒரு சிறியதொகை அன்பளிப்பாக வழங்கப்படுகின்றது. இந்த அன்பளிப்பை வழங்குவதற்கு நோர்வே சும்மோரா பகுதி வாழ்ஈழத்தமிழ் மக்களின் நிதியுதவி கிடைக்கப் பெற்றுள்ளது. எமது பிள்ளைகளின் கற்றல் நடவடிக்கைகள் தொடர்பில் எம்மைவி;ட கடல்கடந்த நாடுகளில் வாழும் எமது உறவுகள் அதிக அக்கறை கொண்டிருப்பது ஒரு ஆரோக்கியமான சூழலாகும்.
எனவே அன்பார்ந்த மாணவர்களே! பாடங்களைக் கற்கின்ற இவ்வேளையில் படிப்பில் அதிக ஆர்வம் காட்டுங்கள். இலங்கையைப் பொறுத்தவரையில் க.பொ.த(உயர்தர) பரீட்சையே ஒரு மாணவனின் அல்லது மாணவியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கின்ற காரணியாக அமைகின்றது. உயர்தர வகுப்பில் அந்த இரண்டு வருடங்களும் உங்களை வருத்தி உழைப்பீர்களாயின் உங்கள் எதிர்காலம் வளமானதாக அமையும். உயர்தரம் படிக்கின்ற காலத்தில் தொலைக்காட்சியுடனும் அலைபேசியுடனும் வெட்டிப் பேச்சுப் பேசுவதிலும் காலத்தை கழித்தால் முழு வாழ்க்கைக் காலமும் திண்டாட்டமானதாகவே அமையும்.
தொலைக்காட்சியைப் பாவியுங்கள். ஆனால் குறிப்பிட்ட கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகளைப் பாருங்கள். தினமும் வரும் செய்திகளைக் கேளுங்கள். சின்னத்திரை நாடகங்களை இரண்டு வருடங்கள் கழித்து யூரியுப்பில் பாருங்கள். அலைபேசியைப் பாவியுங்கள். ஆனால் முக்கியமான தேவைகளுக்காகப் பாவியுங்கள்.
உங்கள் காலம் மிக மிக முக்கியமானது என்பதை மறந்து விடாதீர்கள். போன கால நேரம் திரும்பவும் வராது. உங்கள் உயர்தரம் படிக்கின்ற 2 வருட காலம் கடந்துவிட்டால் மேலும் ஒரு வருடம் காலம் உங்கள் முன்னேற்றம் தாமதமாகும். ஆகவே அந்தக் காலத்தைக் கவனமாகக் கழியுங்கள். சீக்கிரத்தில் உங்கள் பரீட்சையை மேன்மையுடன் தேர்ச்சி அடையப் பாருங்கள்.
என் வாழ்க்கையில் இருந்து ஒரு கதை சொல்கின்றேன். சட்டக் கல்லூரி இடை வகுப்பின் போது தான் நான் 1962ல் சட்ட மாணவ சங்கத் தலைவர் ஆனேன். அதனால் ஞாயமான வேலை இருந்தன. படிக்க நேரமில்லை. எனினும் கிடைத்த நேரமெல்லாம்படித்தேன்.

முடியுமான வரையில் வகுப்புகளுக்குச் சென்று வந்தேன். ஒரு பாடத்திற்கு சில வகுப்புகளே பாட நெறியில் இருந்தன. அந்தப் பாடத்தை ஆசிரியர் சொல்லித் தந்த அந்த வகுப்புகளில் பங்கு பற்ற முடியவில்லை. பரீட்சை வந்தது. 9 பாடங்களில் ஒரு பாடம் மட்டும் நான் எதுவுமே தெரியாத நிலையில் இருந்தேன். அந்தப் பாடம் பரீட்சையில் கடைசிப் பாடம். 8வது பாடப் பரீட்சை முடிந்ததும் 9வது பாடத்தில் நான் சித்தி அடைந்தால் நான் முழுப் பரீட்சையிலும் தேறிவிடுவேன் என்று தெரிந்தது. அடுத்த நாள் பரீட்சை.

முழு இரவும் கண் துஞ்சாமல் கண்விழித்துப் படித்து அந்தப் பாடத்திலும் தேர்ச்சி அடைந்தேன். எனக்குத் தெரியும் அந்தப் பாடத்தில் கோட்டை விட்டால் எனது படிப்பு தள்ளிப் போய்விடக் கூடும்என்று.
ஆகவே உங்கள் பரீட்சையை இரண்டு வருட காலத்தினுள் படித்துத் தேர்ச்சியடையப் பாருங்கள். எது எமது வாழ்க்கைக்கு உதவும் என்பதை நன்றாகப் புரிந்து கொண்டு உங்கள் கல்வியை நீங்கள் தொடர வேண்டுகின்றேன். உங்கள் ஆசிரியர்களும் நாமும் என்றென்றும் உங்கள் வழிகாட்டிகளாக விளங்குவோம் எனக் கூறி உங்கள் யாவரையும் வாழ்த்தி எனது உரையை இத்துடன் நிறைவு செய்கிறேன் – என்றார்.

Related Posts