பெண்ணை மிரட்டி பட்டப்பகலில் கொள்ளை!! ; கொள்ளையர்கள் மூவர் சிக்கினர்

தனித்து வாழ்ந்த வயோதிப் பெண்ணை கத்தியைக் காட்டி அச்சுறுத்தி 5 லட்சம் ரூபாய் பெறுமதியான நகைகள் மற்றும் 25 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்டுத் தப்பித்த கொள்ளையர்கள் மூவர் வல்வெட்டித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தொண்டமனாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்துக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் இந்தக் கொள்ளைச் சம்பவம் கடந்த 8ஆம் திகதி பட்டப்பகலில் இடம்பெற்றது. சந்தேக நபர்கள் மூவரில் இருவர் புன்னாலைக்கட்டுவன் அன்னமார் கோவிலடியிலும் ஒருவர் ஏழாலையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

“மகேஸ்வரி (வயது-78) என்ற வயோதிப் பெண்ணின் வீட்டுக்குள் கடந்த 8ஆம் திகதி மதியம் முகங்களை மூடியவாறு 3 பேர் நுழைந்துள்ளனர். அவரின் கழுத்தில் கத்தியை வைத்து அச்சுறுத்தி 5 லட்சம் பெறுமதியான நகையும் 25 ஆயிரம் பணத்தையும் கொள்ளையிட்டுத் தப்பித்தனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அன்றைய தினம் வயோதிப் பெண்ணால் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அந்தப் பெண்ணின் வீட்டுக்கு அண்மையாகவுள்ள சிசிரிவி வீடியோ பதிவுகளின் ஆதாரங்களைக் கொண்டு 3 பேரையும் மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் அடையாளம் கண்டனர்.

அதனடிப்படையில் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஏழாலையைச் சேர்ந்தவர். மற்றைய இருவரும் புன்னாலைக்கட்டுவன் அன்னமார் கோவிலடியைச் சேர்ந்தவர்கள். சந்தேக நபர்கள் விசாரணையின் பின்னர் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள்” என்று பொலிஸார் கூறினர்.

Related Posts