பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்கு துன்புறுத்தல்கள் அற்ற சூழல்!

இலங்கையிலுள்ள பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்காக மிகவும் பாதுகாப்பான மற்றும் துன்புறுத்தல்கள் அற்ற சூழலை உருவாக்குவதற்கான சட்டக்கொள்கையை தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய இந்த திட்டங்களை மிகவும் செயற்றிறனுடன் முன்னெடுப்பதற்கான அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையொன்றினூடாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பெண்கள் மற்றும் பிள்ளைகளுக்காக மிகவும் பாதுகாப்பான மற்றும் துன்புறுத்தல்கள் அற்ற சூழலை உருவாக்கும் விதத்தில் கடந்த ஆண்டு மே மாதத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஒரு செயலணி உருவாக்கப்பட்டது. அச் செயலணியினரால் தயாரிக்கப்பட்ட திட்ட வரைபு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கடந்த 23ம் திகதி கையளிக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த திட்ட வரைபுக்கு அமைய அமைச்சரவையின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்றிட்டங்களை எதிர்வரும் 6 வாரங்களுக்குள் நடைமுறைப்படுத்துவதற்குரிய பொறிமுறையொன்றை முன்னெடுத்து, அதனை கட்டம் கட்டமாக செயற்படுத்தவும் பிரதமர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Related Posts