டெல்லியில் மருத்துவ மாணவியை கற்பழித்து கொன்ற குற்றவாளி முகேஷ சிங் பி.பி.சிக்கு அளித்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதில் பெண்களை பற்றி இழிவான கருத்துக்களை கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கண்டனங்கள் கிளம்பியுள்ளன.
நடிகை டாப்சி கடவுள் அனுமதித்தால் கற்பழிப்பு குற்றவாளி முகேஷ்சிங்கை நானே கொலை செய்வேன் என்று ஆவேசமாக கூறினார்.
நடிகர் சித்தார்த் கூறும் போது, பேட்டி அளித்த அந்த மிருகத்தை தண்டிப்பதற்கு பதிலாக பேட்டி ஒளிபரப்புவதற்கு தடைவிதித்தது கேலிக்கூத்தாக உள்ளது என்றார்.
நடிகை குஷ்பு கூறியதாவது:–
பெண்களுக்கு எதிராக தினம் தினம் வன்முறைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. ஆனால் நிர்பயா வழக்கை மட்டுமே பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.
நிர்பயா ஆவணப்படம் பற்றி சர்ச்சைகள் கிளம்பி இருக்கிறது. பெண்களுக்கு எதிராக தினமும் நடக்கும் தாக்குதல்களைத்தான் இந்த ஆவண படத்தை விட முக்கியமான பிரச்சனையாக பார்க்க வேண்டும்.
தற்போது உருவாகியுள்ள பரபரப்பு காரணமாக இந்த ஆவண படத்தை நிறையபேர் பார்க்க கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பாலியல் குற்றங்களுக்கு தண்டனை கிடைக்க செய்வதும் மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்துவதும் தான் இப்போதைக்கு முக்கியம்.
இவ்வாறு குஷ்பு கூறினார்.