பெண்களுக்கான சுயதொழில் பயிற்சித் திட்டம் சங்கானையில் ஆரம்பம்

யாழ்.மாவட்ட பெண்களுக்கான சுயதொழிலை மேம்படுத்தும் (பற்றிக்) பயிற்சி திட்டத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

chankanai

மேற்படி நிகழ்வு சங்கானையில் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் தேசிய அருங்கலைகள் பேரவையின் ஏற்பாட்டில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அமைச்சு ஒரு மில்லியனும், தேசிய அருங்கலைகள் பேரவை ஒரு மில்லியனும், றோட்டறிக் கழகம் ஒரு மில்லியனுமாக மூன்று மில்லியன் ரூபாவில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்மூலம் இளம் யுவதிகளினது சுயதொழில் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மகிந்த சிந்தனைக்கு அமைவாக நடப்பாண்டில் பெண் தொழில் முயற்சியாளர்களை பலப்படுத்தும் வகையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சினால் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பாக அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி விளக்கவுரையாற்றினார். அத்துடன் பிரதியமைச்சர் வீரகுமார திஸாநாயக்க, வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, பனை அபிவிருத்தி சபைத் தலைவர் பசுபதி சீவரத்தினம், கொழும்பு றோட்டறிக் கழக உறுப்பினர் சரவணபவன் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் தையல் இயந்திரங்கள், துணிவகைகள், கைப்பணிகளுக்குத் தேவையான உபகரணங்கள் தொலைக்காட்சிப் பெட்டிகள் அலுவலக செயற்பாட்டுக்கென மடிக்கணனி உள்ளிட்ட பல்வேறுபட்ட தொழில்சார் உபகரணங்கள் அமைச்சர் அவர்களினால் கையளிக்கப்பட்டன.

இதன்போது பயனாளிகள் உள்ளிட்ட துறைசார்ந்தோருடன் அமைச்சர் அவர்கள் கலந்துரையாடி அவர்களது தேவைகள் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

இதில் சங்கானை பிரதேச செயலர் சோதிநாதன், அமைச்சரின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி குகேந்திரன், ஈ.பி.டி.பியின் வலிகாமம் இணைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன் (ஜீவன்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Posts