பெங்கால் வீரர் தலையை தாக்கிய பந்து!

கிரிக்கெட் விளையாட்டை பொதுவாக ஜென்டில்மேன் விளையாட்டு என்று அழைப்பதுண்டு. ஆனால், சில நேரங்களில் பீல்டிங் செய்யும்போதும் பேட்டிங் செய்யும்போதும் பந்து தலையை தாக்குவதும் அவ்வப்போது நடந்து வருகிறது.

அந்த வகையில், தலையை பந்து தாக்கிய சம்பவம் மேற்கு வங்காளத்தில் இப்போது நடந்துள்ளது. மேற்கு வங்காளம் கிரிக்கெட் சங்கம் சார்பில் மூன்று நாட்கள் கொண்ட லீக் தொடர் நடைபெற்றது. இதில் நேற்று 3-வது நாள் ஆட்டத்தில் கிழக்கு பெங்கால்- பவானிபூர் அணிகள் விளையாடிக் கொண்டிருந்தன.

பவானிபூர் அணியின் பேட்ஸ்பேன் ப்ரினன் தத்தா பேட்டிங் செய்து கொண்டிருந்தார். அப்போது கிழக்கு பெங்கால் அணியின் விரிதாம் பொரேல் பேட்ஸ்மேன் அருகில் பார்வர்டு ஷார்ட் லெக் திசையில் பீல்டிங் செய்துகொண்டிருந்தார்.

அப்போது ப்ரினன் தத்தா புல் ஷாட் அடித்தார். இதிலிருந்து தப்பிக்க பொரேல் திரும்பினார். அப்போது அவரது காதிற்கு பின்னால் தலையை பந்து பலமாக தாக்கியது. ஹெல்மெட் அணிந்திருந்த போதிலும் அதையும் தாண்டி மண்டையை தாக்கியது. உடனே அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

‘‘பந்து தாக்கியதால் எனக்கு வலி ஏற்பட்டது. இருந்தாலும் நான் உணர்வுடன்தான் இருந்தேன். அதிர்ஷ்டவசமாக இந்த போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. அங்கு ஆம்புலன்ஸ் வசதி இருந்ததால் நான் அதன் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். எனது அணியில் விளையாடிய அங்கித் கேஷ்ரிக்கு இதுபோல் ஏற்பட்டதால் நான் பயந்தேன். ஆனால், எனக்கு ஒன்றும் இல்லை. நான் நலமாக இருக்கிறேன்’’ என்றார்.

காயம் பட்ட இடத்தில் வீக்கம் இருப்பதால், காயம் குறித்து கண்டறிய எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது. இதன் முடிவு இன்று மதியம் கிடைக்கும், அதன்பின்தான் காயம் குறித்து முழுவிவரம் தெரியும் என மருத்துவமனை நிர்வாகம் கூறுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் இதே அணிகள் மோதியபோது கிழக்கு பெங்கால் அணியின் அங்கீத் கேஷ்ரி சகவீரருடன் மோதி பலத்த காயம் அடைந்தார். அதன்பின் மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது பரிதாபமாக உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts