சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை (பிப்.15)சரணடைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
வருமானத்துக்குப் பொருந்தாத வகையில் சொத்துகள் குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிராக தொடுக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை, தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.
மேலும், இவர்கள் உடனடியாக பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் சரணடையுமாறு உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் உள்ள 48-ஆவது அறையில் செவ்வாய்க்கிழமை நீதிபதி அஸ்வத் நாராயணா முன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சரணடைய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஆனால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகவில்லை.
இதனிடையே, உடல்நிலை சரியில்லாததால், நீதிமன்றத்தில் சரணடைய 4 வாரங்கள் கால அவகாசம் கேட்டு சசிகலா, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
எனினும், சசிகலா, அவரது உறவினர்களான இளவரசி, சுதாகரன் ஆகிய மூன்று பேரும் பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை (பிப்.15) சரணடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நீதிமன்றத்தை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
இதனிடையே, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறப்பு நீதிமன்றத்தில் சரணடைந்ததும், அவர்கள் மூன்று பேரையும் பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் அடைக்க உத்தரவிடப்படுவார்கள். இதற்காக மத்திய சிறையில் மூன்று பேருக்கும் சிறை அறைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன.