பெங்களூருவில் இயல்பு நிலை திரும்பியது!

காவிரி பிரச்சனையில் போர்க்களமாக காட்சியளிக்கும் பெங்களூரு நகரம் இன்று இயல்பு நிலைமைக்கு திரும்பியது. பெங்களூருவில் அரசு பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் இயங்குகின்றன. இருப்பினும் பல தனியார் பள்ளிகள் விடுமுறை அறிவித்துள்ளன.

bangalore

காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. அவ்வளவுதான் பெங்களூரு நகரம் பற்றி எரிந்தது.

ஒரே நாளில் தமிழக பேருந்துகள், லாரிகள் 100க்கும் மேற்பட்டவை தீக்கிரையாக்கப்பட்டன… தமிழர்களின் நிறுவனங்கள் குறிவைத்து தேடித்தேடி தாக்கப்பட்டன. இதனால் பெங்களூரு நகரம் போர்க்களமானது.

வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். மற்றொருவர் தப்பி ஓடும்போது கீழே விழுந்து பலியானார்.

இதனைத் தொடர்ந்து துணை ராணுவப் படை பெங்களூரு நகரில் குவிக்கப்பட்டது. 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது. இதனால் நேற்று மாலை முதல் பெங்களூருவில் இயல்பு நிலை திரும்ப தொடங்கியது.

இந்த நிலையில் இன்று காலை பெங்களூரு நகரம் வழக்கம்போல இயங்கி வருகிறது. அரசு பேருந்துகள் அனைத்தும் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்துக்காக கர்நாடக பேருந்துகள் இயக்கப்படவில்லை.

பல இடங்களில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளி மற்றும் கல்லூரிகள் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

பெங்களூருவில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. 16 காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவும் தொடர்ந்தும் அமலில் இருக்கிறது.

இதனிடையே காவிரி வழக்கில் செப்.20-ல் உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா தரப்பு வாதங்களை முன்வைக்க சட்ட வல்லுநர்கள் மும்முரமாக இயங்கி வருகின்றனர். அதேபோல் காவிரி கண்காணிப்புக் குழு கோரிய ஆவணங்களைத் தாக்கல் செய்வதிலும் சட்ட வல்லுநர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Posts