சீனாவின் முதலாவது விண்வெளி ஆராய்ச்சி நிலையமான “டியாங்கோங் – 1” பூமியின் மீது இன்னும் இரண்டு வாரங்களில் மோதவுள்ளதாக அந்நாட்டு விண்வெளித் துறை தெரிவித்துள்ளது.
ரஷ்யா மற்றும் அமெரிக்காவிற்கு போட்டியாக 2011ஆம் ஆண்டு மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தினை சீனா விண்வெளியில் வெற்றிகரமாக கட்டி முடித்தது.
சுமார் 8.5 தொன் எடைகொண்ட குறித்த விண்வெளி ஆராய்ச்சி நிலையம் 2016ஆம் ஆண்டுடன் தனது கட்டுப்பாட்டை முற்றாக இழந்துவிட்டது. இந்த நிலையில் டியாங்கோங் – 1 பூமியுடன் மோதி அழிவுக்குள்ளாகும் என அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மணிக்கு சுமார் 27,000 கிலோ மீற்றருக்கும் அதிக வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கும் டியாங்கோங் – 1 பூமியின் வளிமண்டளத்திற்குள் நுழையும் போது எரியத் தொடங்கிவிடும்.
எனினும் முற்றாக எரியாத நிலையில் பெரும்பாலான பகுதிகள் பூமியில் மோதக் கூடிய வாய்ப்பு உள்ளதாக சீன விண்வெளித் துறை தெரிவித்துள்ளது.
டியாங்கோங் – 1 பூமியுடன் மோதப்போகும் இடம் தொடர்பிலும் அதனால் ஏற்படும் பாதிப்பு தொடர்பிலும் மேலதிக தகவல்கள் எதுவும் வெளிப்படுத்தப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகின்றது.