பூநகரியில் 860 ஏக்கர் காணி போலி ஆவணங்கள் மூலம் சிங்களவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதுடன் அக்காணிகளில் புதைக்கப்பட்ட சடலங்கள் புதையல் பூஜை என்ற போர்வையில் அகற்றப்பட்டுள்ளன என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் அறியவருவதாவது:
பூநகரி- கெளதாரிமுனை – பரமன்கிராயில் போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டு சுமார் 860 ஏக்கர் காணிகள் சிங்களவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன எனத் தெரிய வந்துள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த மூவரே போலி ஆவணங்களைத் தயாரித்து அக்காணிகளை பல கோடி ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளனர் எனத் தெரிய வந்துள்ளது.
இந்தக் காணிகளை வாங்கிய ஒருவர் புதையல் பூஜைகளை செய்தார் என்றும் இதன்போது சில உடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டன என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். இந்த உடலங்கள் வரணியில் இருந்து கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்டவையாக இருக்கலாம் எனவும் மக்கள் சந்தேகம் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா நேரில் சென்று நிலைமைகளை அவதானித்தார். அத்துடன் இந்த அத்துமீறிய செயற்பாட்டைத் தடுக்க நடவடிக்கைகளையும் எடுத்தார்.
அத்துடன் வெட்டுக்காட்டுப் பகுதியில் கைலாயர் தோட்டக்காணிகளை இராணுவத்தினர் சுவீகரிக்க முயன்ற செயலையும் தடுத்து நிறுத்த குருகுலராஜா நடவடிக்கை எடுத்துள்ளார் எனத் தெரியவருகின்றது.