பூநகரியில் சர்வதேச விமான நிலையம் அமைக்க முடியும்

வடக்கில் சர்வதேச விமான நிலையம் அமைக்க விரும்பினால், பூநகரிக்கும் முழங்காவிலுக்கும் இடையிலுள்ள பகுதியில் அமைக்க முடியும். சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கான விசாலமான காணிகள் இந்தப் பிரதேசத்திலுள்ளன என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

பலாலியில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது என்பது மக்களின் பொருளாதாரத்தை பாதிக்கும். பலாலியைச் சுற்றி இருக்கும் மக்களின் காணிகள், மக்களுக்கு சிறந்த வருமானங்களைப் பெற்றுத்தரக்கூடிய விவசாய காணிகளாகும்.

2 பரப்புக் காணியில் விவசாயம் செய்து, நடுத்தர வர்க்க குடும்பமாக வாழக்கூடிய காணிகள். அதேபோல், மயிலிட்டி துறைமுகம் இயற்கையான மீன்பிடி இறங்குதுறையைக் கொண்ட அதிகளவு மீன்கள் பிடிக்கப்படும் இறங்கு துறை ஆகும். இவ்வாறான இடங்களை வளைத்து, சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டிய தேவையில்லை.

யாழ்ப்பாணத்தில் குடிசன நெரிசல் அதிகரித்து வருகின்றது. 10 வருடங்களில் யாழ்ப்பாணத்தில் வாகனங்களின் பயன்பாடு அதிகமாகும். பெரும் போக்குவரத்து நெரிசலை யாழ்ப்பாணம் சந்திக்கும். இந்நேரத்தில் சர்வதேச விமான நிலையம் அமைத்தால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

பூநகரிக்கும் முழங்காவிலுக்கும் இடையில் விமான நிலையம் அமைக்க முடியும். அங்கு விசாலமான காணிகள் உள்ளன. அங்கு சர்வதேச விமான நிலையம் அமைத்தால் அந்தப் பிரதேசம் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடையும்.

மேலும், யாழ்ப்பாணத்தின் சனநெரிசல் குறைக்கப்படும். மக்கள் பூநகரி- முழங்காவில் நோக்கி இடம்பெயர்வார்கள். மேலும், நினைத்த அளவுக்கு விமான நிலையத்தை பெரிதாக்கவும் முடியும் என்றார்

Related Posts