பூசாரியை நம்பியது விதியா : நெஞ்சை பதறவைக்கும் ஆசிரியரின் படுகொலை

அன்று செப்டம்பர் முதலாம் திகதி. பாடசாலை மாணவர்களின் விடிவுக்காக தனது கடமையை ஆரம்பித்த ஆசிரியை சரஸ்வதி, சூரியன் அஸ்தமித்த பின்னரும் வீடு திரும்பவில்லை. கல்விக் கடவுளாம் சரஸ்வதியின் பெயரைக் கொண்ட இந்த ஆசிரியை வீடு திரும்பாதது அப்பிரதேச மக்களையே பதற்றமடையவைத்தது.

saraswathy-teacher - 2

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்றையும் இலட்சியமாகக் கொண்டு பணியாற்றிய இந்த ஆசிரியை இந்தப் பிரதேசத்திலேயே நன்மதிப்பைப் பெற்றவர். தான் உண்டு தன் வேலை உண்டு என்றில்லாமல் அத்தோட்ட மக்களின் விடிவுக்காகவும் பல்வேறு சமூகப் பணிகளில் தன்னை அர்ப்பணித்த இந்த இளம் பட்டதாரி ஆசிரியை இப்பிரதேச மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர்.

இவ்வளவு அம்சங்களையும் தன்னகத்தே கொண்ட ஆசிரியை சரஸ்வதி, இப்பிரதேச மக்களின் இதயங்களில் அழியாத இடத்தைப் பிடித்ததோடு நன்மதிப்பையும் பெற்றவராகக் காணப்பட்டார். இப்படியான ஒரு ஆசிரியை காணாமல்போனது அவர் வசித்த ப்ளானிவத்த தோட்ட மக்களை மட்டுமல்லாமல், பசறை பிரதேச மக்கள் அனைவரின் மனதிலும் பெரும் கவலையையும் சோகத்தை யும் ஏற்படுத்தியது. இதனால் பெரியோர், சிறியோர், ஆண்கள், பெண்கள் என்று பேதமின்றி அனைவருமே தேட ஆரம்பித்தனர்.

அவர் கற்பித்த பாடசாலை, பயணம் செய்த பஸ், வழமையாக செல்லும் இடங்கள் என எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்தனர். ஆனால், ஆசிரியை சரஸ்வதியைப் பற்றிய தகவல்கள் எதுவுமே கிடைக்கவில்லை. எங்கு தேடியும் தகவல் கிடைக்காததால் அவரது கணவர் இராமசாமி 2 ஆம் திகதி பசறை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள் ளார். இதன் பயனாக பசறை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரியான டப்ளியு.எம்.தயானந்த தலைமையிலான பொலிஸ் குழுவினர் புலனாய்வு நடவடிக்கைகளை ஆரம்பித்தனர்.

பொலிஸாரின் கூற்றின்படி கோணகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் செப்டெம்பர் முதலாம் திகதி கடமைக்குச் சென்ற இந்த ஆசிரியை பிற்பகல் 1.38 மணிக்கு பதிவேட்டில் கையயழுத் திட்டு விட்டு பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளார். அன்றைய தினம் வழமைபோல் பாடசாலை ஆசிரியர்கள், அதிபர் மற்றும் மாணவர்களுடன் என்றும்போல் சர்வ சாதாரணமாகவும் சந்தோசமாகவுமே கடமையில் ஈடுபட்டிருந்தார் என்று ஆசிரியர்களும் மாணவர்களும் கூறுகின்றனர்.

saraswathy-teacher

பாடசாலையிலிருந்து வெளியேறிய அந்த ஆசிரியை பதுளையிலிருந்து பசறை நோக்கிவந்த தனியார் பஸ் ஒன்றில் ஏறிச்சென்றதாக கண்டவர்கள் தகவல் தந்துள்ளனர். ஆனால், அவர் பசறையிலிருந்து எங்கு சென்றார்? எப்படிச் சென்றார் என்ற விடயம் புரியாமலேயே இருந்தது. முதலாம் திகதி காணாமல்போன இந்த ஆசிரியையை தேடும் படலம் 14 நாட்களாக தேடியும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

காணாமல்போன இந்த ஆசிரியை மடுல்சீமையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மடுல்சீமையில் ஆரம்பக் கல்வியை யும் பசறை தமிழ் மகா வித்தியாலயத் தில் உயர் கல்வியையும் பெற்ற இவர் ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் டிப்ளோமா பட்டம் பெற்று ஆசிரியராக நியமனம் பெற்றவர். ஆசிரியர் தொழிலில் இருக்கும்போதே தனது அயராத முயற்சியால் வெளிவாரி (கலைமாணி) பட்டத்தையும் தன்னகத்தே சுவீகரித்துக் கொண்டார்.

இந்த ஆசிரியை மடுல்சீமை, கெட்டவல ஒப்டன், விக்னேஸ்வரா ஆகிய பாடசாலைகளில் பணியாற்றிய பின் கோணகலை தமிழ் மகா வித்தி யாலயத்தில் இறுதியாகப் பணியாற்றி யுள்ளார். 5 சகோதரர்களைக் கொண்ட குடும்பத்தில் நான்காவது பிள்ளையாக அதுவும் பெண் பிள்ளையாக பிறந்ததால் இவர் செல்லமாகவும் ஆதரவாகவும் வளர்க்கப்பட்டுள்ளர். இதனால் இவரது குடும்பம் இவருடைய கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் பக்கபலமாக இருந்துள்ளது. ஆசிரிர் தொழிலைப் பெற்ற சரஸ்வதி ப்ளானிவத்தை தோட்டத்தைச் சேர்ந்த இராமசாமி என்பவரைத் திருமணம் முடித்துள்ளார். இராமசாமி சரஸ்வதி தம்பதிகளுக்கு சதுர்ன் என்ற ஆறு வயதுடைய மகனும் இருக்கின்றார். தினசரி ப்ளானிவத்தையிலிருந்து கோணகலை தமிழ் மகா வித்தியாலயத்திற்கு பஸ் மூலமாகவே கடமைக்குச் சென்று வந்துள்ளார்.

செப்டெம்பர் முதலாம் திகதி பாடசா லையிலிருந்து பசறைக்கு வந்த ஆசிரியை புடைவைக் கடை ஒன்றில் புதிதாக ஒரு சேலை மற்றும் சில பொருட்களை வாங்கிக்கொண்டு மீதும்பிட்டிய பக்கமாக செல்லும் ஒரு பஸ்ஸில் சென்றதாக பொலிஸா ருக்குத் தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் பசறை பொலிஸார் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ள னர். விசாரணை கள் தொடரும் போது மீதும்பிட் டிய தோட்டத்தில் உள்ள களபொட பிரிவிலுள்ள நாகம்மாள் கோவிலுக்குச் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது.

இதனால் பொலிஸாரின் விசாரணைகள் ஜோதிகுமார் சுபேந்திரகுமார் (வயது – 27) என்ற பூசாரியின் பக்கம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்குறிப்பிட்ட பூசாரியான சுபேந்திரகுமார் ஒரு சிறந்த ஜோதிடர் ‡ வைத்தியர் ‡ பிணிகளைப் போக்குபவர் ‡ மாந்திரீ கம் செய்பவர் என சில காலங்களுக்கு முன் இந்தப் பூசாரியைப் பற்றிய கட்டுரை ஒன்று தமிழ்த் தேசிய இதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது.

இதனால் தனது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள சஞ்சலங்கள், துனபங்கள் தொடர்பாக இந்தப் பூசாரியின் மூலம் தீர்க்கலாமோ என்ற நம்பிக்கையுடன் இந்த ஆசிரியை ஏன் அங்கு சென்றிருக்கக் கூடாது என்ற சந்தேகம் பொலிஸாருக்கு எழுந்துள்ளது. பொலிஸாரின் இந்தச் சந்தேகம் வீண்போகவில்லை. குறிப்பிட்ட ஆசிரியை செப்டெம்பர் முதலாம் திகதி மீதும்பிட்டியவில் உள்ள அக்கோவிலில் அந்தப் பூசாரியைச் சந்திக்கச் சென்றுள்ளார். தோட்ட லயத்தில் இருக்கும் பூசாரியின் வீட்டுக்கு முன்பாக அமைந்துள்ள ஒரு மண் வீட்டில் பூசாரி சுபேந்திய குமாரின் தந்தை ஜோதிகுமாரும் அவரது மனைவியும் வசிக்கும் குடிலுக்குச் சென்றுள்ளார்.ஆசிரியை வரவேற்ற பூசாரியின் தாயார் குடிப்பதற்குத் தேநீர் ஊற்றித் தரவா எனக் கேட்டுள்ளளார்.

மிகவும் சூடாக இருப்பதால் தேநீர் வேண்டாம். குடிப்பதற்கு சிறிது தண்ணீர் தாருங்கள் என்று வாங்கிக் குடித்துள்ளார். தண்ணீரைக் குடித்த பின் கோயிலுக்கு முன்னாள் அமைந்துள்ள இரண்டு சிறிய அறைகள் மட்டுமே கொண்ட ஒரு தனியான கட்டடத்தில் பூசை செய்துகொண்டிருந்த பூசாரியைப் பார்க்கச் சென்றுள்ளார். அங்கு சென்றவர் திரும்பி வரவேயில்லை.

பூசாரியுடனான தொடர்பு இப்படித்தான் ஏற்பட்டதா?

கொலை செய்யப்பட்ட ஆசிரியை சரஸ்வதி படிப்பிக்கும் பாடசாலையில்தான் கொலையாளி எனச் சந்தேகிக்கப்படும் பூசாரி சுபேந்திர குமாரின் பிள்ளையும் கல்வி பயில்கின்றாராம். அதே வகுப்பில் காலஞ்சென்ற ஆசிரியையின் மகனும் கல்வி கற்றுள்ளார். பிள்ளைகள் இருவரும் நண்பர்களாகிவிட்டனர். பிள்ளையின் படிப்பு தொடர்பாக அடிக்கடி பாடசாலைக்கு வரும் பூசாரி, ஆசிரியை என்ற அடிப்படையில் சரஸ்வதியிடமும் மரியாதையாகவும் அன்பாகவும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இவ்வாறான நிலையில் ஆசி ரியை சரஸ்வதியும் தனக்கும் தன் பிள்ளைக்கும் குடும்பத்தவர்களுக் கும் ஏற்படும் சஞ்சலங்கள் தொடர்பாக இந்தப் பூசாரியிடம் கூறியுள்ளார். பூசாரியும் இவற்றிற்கு தன்னால் பரிகாரம் பெற்றுத்தர முடியும் என்று ஆசிரியையிடம் கூறியுள்ளார். பூசாரியின் இந்த வார்த்தைகளும் ஏற்கனவே, அந்தப் பூசாரியைப் பற்றி தமிழ்ப் பத்திரிகை ஒன்றில் வந்த செய்தியும் காலஞ்சென்ற ஆசிரியை சரஸ்வதிக்கு நம்பிக்கையை ஏற்படுத் தியுள்ளன. இதன் காரணமாகவே ஆசிரியை சரஸ்வதி பூசாரியை நாடிச் சென்றுள்ளார் என்பதும் பின்னர் தெரியவந்துள்ளது.

பூசாரியின்பால் சந்தேகம் கொண்ட பொலிஸாருக்கு மற்றுமொரு அநாமதேய தகவல் கிடைத்துள்ளது. இந்தத் தகவலின்படி குறிப்பிட்ட பூசாரியும் தனியான கட்டடத்திற்கு முன் புதிதாக மண் நிரப்பப்பட்டு சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு குளி மூடப்பட்டிருப்பதை கண்டுபிடித் துள்ளனர். இதன்காரணமாக பதுளை மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவானின் விசேட அனுமதியைப் பெற்று நீதிவானின் முன்னிலையி லேயே அந்தச் சந்தேகத்திற்கிடமான குழி தோண்டப்பட்டுள்ளது. காணாமல்போய் 14 நாட்களின் பின் குழிதோண்டப்பட்டபோது இரண்டு அடி ஆழத்தில் பொலித்தீனால் சுற்றப்பட்ட ஒரு சடலம் அழுகிய நிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. அணிந்திருந்த ஆடைகளைக் கொண்டே (அதாவது செப்டம்பர் முதலாம் திகதி பாடசாலைக்குச் செல்லும்போது அணிந்திருந்த ஆடைகள்) அவை காணாமல்போன ஆசிரியை சரஸ்வதிதான் என அடையாளம் காணப்பட்டது.

அதேவேளை, மற்றுமொரு சிறிய குழியில் ஆசிரியையின் கைபபை புதிதாக வாங்கிய ஒரு சேலை மற்றும் பாடசாலை பதிவுப் புத்தகம் கையடக்கத் தொலைபேசி என்பன பொலித்தீன் பை ஒன்றில் சுற்றப்பட்டு புதைக்கப்படிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பூசாரியின் வீட்டை அடித்து நொறுக்கியுள்ளனர்.

இந்தத் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றபோது சந்தேகநபரான பூசாரி சுபேந்திரகுமார் வீட்டில் இருக்கவில்லை. சுபேந்திரகுமாரின் தந்தையும் தாயும் பொலிஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களிடம் பசறைப் பொலிஸார் விவரங்களைப் பெற்றுள்ளனர். சுபேந்திரகுமாரின் தாயாரின் தகவலின்படி குறித்த ஆசிரியை திரும்பிப் போய்விட்டாரா எனக் கேட்டபோது அவர் வேறு வழியாகச் சென்றுவிட்டார் என பூசாரி தெரிவித்ததாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதேவேளை, தனது மகனிடம் பரிகாரம் தேடிவரும் பக்தர்கள் முன் வழியாக வந்தாலும் வீட்டுக்குப் பின்னால் உள்ள வழியாகவும் செல்வதுண்டு. இதனால் எனக்கு ஏதும் சந்தேகம் ஏற்படவில்லை என பூசாரியின் தாயார் கூறியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அயலவர்களிடம் பேசியபோது, பூசாரி இளம் வயதினரே ஆனாலும் மிகவும் கொடூரமானவர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் அவர் பூசை நடத்தி மாந்திரீகம் செய்யும் வீட்டின் பக்கம் எவரையும் வரவிடுவதுமில்லை.

அப்படியே யாரும் சென்று விட்டாலும் அவர்களை கொடூரமான வார்த்தைகளால் பேசி விரட்டிவிடுவார். இதனால் நாங்களும் அவரை கண்டுகொள்வதுமில்லை; அலட்டிக்கொள்வதுமில்லை என்றும் தங்களுக்கு எதுவுமே தெரியாது என்றும், கூறுகின்றனர்.

தோண்டி எடுக்கப்பட்ட குழி தொடர்ச்சியாக ஏற்பட்டிருக்கும் வரட்சியால் இருக்கமாகவும் கட்டாந்தரையாகவும் இருப்பதால் ஒரு பிரேதத்தை புதைக்கும் அளவுக்கு தனி ஒரு மனிதரால் தோண்டிப் புதைக்க முடியுமா? அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு சிறு சத்தமாவது கேட்டிருக்காதா? சந்தேகநபருக்க துணையாக வேறு நபர்களும் உதவியுள்ளனரா என்ற சந்தேகமும் எழுகின்றது.

பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட கொலைசெய்யப்பட்ட ஆசிரியையின் கையடக்கத் தொலைபேசியின் பதிவுகள் பொலிஸாரின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது ஆசிரியைக்கு கடைசியாக சந்தேகநபரான பூசாரியிடமிருந்தே அழைப்பு வந்துள்ளது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் குறிப்பிட்ட சந்தேகநபரான பூசாரியை உடனடியாக பொலிஸ்நிலையத்துக்கு வரும்படி பொலிஸார் குறிப்பிட்ட பூசாரிக்கு தகவல் அனுப்பியுள்ளனர். பொலிஸாரின் தகவல் கிடைத்ததும் தான் கைதுசெய்யப்படலாம் என கருதிய சந்தேகநபர் மீதும்பிட்டிய சந்தியில் பசறை நோக்கிவந்த ஒரு பஸ்ஸின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார்.

இதனால் பலத்த காயங்களுக்கு உள்ளான பூசாரி பொலிஸ் பாதுகாப்புடன் பசறை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு இப்பொழுது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பூசாரியின் கடந்தகால திருவிளையாடல்கள்

குறிப்பிட்ட பூசாரி ஆரம்ப காலத்தில் இந்தச் சிறு கோவிலைக் கட்டி பூசைகளை நடத்தி, ஜோதிடம் பார்த்தல், மாந்திரீகம் செய்தல் எனப் பல வேலைகளைப் புரிந்துள்ளார். மாந்திரீகம் செய்யவரும் பெண் பக்தைகளிடம் மாங்கல்ய தோசம் இருப்பதாகக் கூறி தாலிக்கொடிகளைக் கழற்றி பாலில் போட்டு பூசை செய்ய வேண்டும் எனக்கூறி அவற்றை அபேஸ் செய்து உண்மையான தாலிக் கொடிகளுக்கு மாற்றுத்தாலிக் கொடிகளை வைத்து மோசடி செய்து வந்துள்ளார் என்றும் பெருந்தொகையான பணங்களை வாங்கிக்கொண்டு அவற்றைத் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியுள் ளார் என்றும் இப்பிரதேசத் தில் இடம்பெறும் சிறு திருட்டுச் சம்பவங்களுடனும் தொடர்புடையவர் என்றும் இப்பிரதேச மக்கள் கூறுகின்றனர்.

பூசாரியின் ஏமாற்று நடவடிக்கைகள் அம்பல மாகி வருவதால் அவரிடம் வரும் பக்தர்களின் கூட்டமும் படிப்படியாகக் குறைந்து விட்டது என்றும் ஊர் மக்கள் கூறுகின்றனர்.

பொலிஸ் பாதுகாப்புடன் பூதவுடல் நல்லடக்கம்:-

காணாமல்போய் 14 நாட்களின் பின் தோண்டி எடுக்கப்பட்ட ஆசிரியை சரஸ்வதியின் சடலம் பிரேத பரிசோதனைகளின் பின் சீல் வைக்கப்பட்ட நிலையிலே உறவி னர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனையின்போது ஆசிரியை சரஸ்வதி கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் கூறுகின்றனர். ஆசிரியை சரஸ்வதியி டம் இருந்த நகைகளையும் பெறுமதி யான பொருட்களையும் அபகரிக்கும் நோக்குடனேயய இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலி ஸார் சந்தேகம் கொள்கின்றனர்.

இக்கொலை தொடர்பாக பசறை பொலிஸார் தொடர்ந்தும் புலன் விசாரணைகளை மேற்கொண்டுள்ள னர். சந்தேகநபரான பூசாரி சிகிக்சை யின் பின் பதுளை சிறைச்சாலையில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியையின் உடல் நல்லடக்கம் :-

18 ஆம் திகதி வியாழக்கிழமை ப்ளானிவத்தை தோட்ட பொது மையானத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவ, மாணவிக ளின் கதறல்களுக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இது இப்பிரதேசத்திலேயே ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பு என்றும் கல்வியின் கடவுளாம் சரஸ்வதியின் பெயரைக் கொண்ட எங்கள் ஆசிரியை எங்களுக்கெல்லாம் ஈடு இணையற்ற ஒரு சொத்தாகவே இருந்தார்.

அவரைப் படுகொலை செய்த பாவிகளை இனங்கண்டு கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்; இது ஏனையவர்களுக் கும் ஒரு பாடமாக வேண்டும் என மாணவர்கள் கண்ணீருடன் கூறியது மனதை உருக்குவதாக இருந்தது.

அதேவேளை, படித்து பட்டம் பெற்ற பகுத்தறிவாளரான இந்த ஆசிரியையும் பூசாரிகளை நம்பி மோசம் போயுள்ளாரே என்றும் சிந்திக்கத் தூண்டுகிறது. இதுதான் விதியா?

Related Posts