புளொட்டின் பெண் வேட்பாளர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின்பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகனின் உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
புதுக்குடியிருப்பு பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடத் தீர்மானிக்கப்பட்ட புளொட்டின் பெண் வேட்பாளர் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே நேற்று (வியாழக்கிழமை) குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கூட்டமைப்பில் அங்கம் பெறுகின்ற புளொட் கட்சி தமது கட்சி சார்பில் மூன்று பிள்ளைகளின் தாயாராகிய பெண் வேட்பாளர் ஒருவரை தெரிவு செய்திருந்தது.
குறித்த பெண் வேட்புமனுவில் கையெழுத்திடுவதற்காக நேற்று முன்தினம் (புதன்கிழமை) புதுக்குடியிருப்பில் உள்ள சிவமோகனின் அலுவலகத்தினைச் சென்றபோது அவரை வாசலில் வைத்து சிவமோகன் தரப்பினர் மிரட்டியதாக கூறப்படுகின்றது.
இதன்போது, “தேர்தலில் போட்டியிடக்கூடாது, அவ்வாறு போட்டியிட்டால் கொலை செய்து ரயர் போட்டு எரிக்கப்படுவாய்” என்றும் அந்தப் பெண்ணை அவர்கள் மிரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து குறித்த பெண் அங்கிருந்து சென்றுதலைமறைவாகியதோடு, தேர்தலில் இருந்து விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக மிரட்டல் சம்பவம் நடைபெற்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் சம்பவ இடத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த முறைப்பாட்டினையடுத்து மிரட்டல்விடுத்த நபர் புதுக்குடியிருப்பு பொலீசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.