புலிச் சந்தேகநபர்களின் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்குகளைத் துரிதமாக விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, சிறப்பு மேல் நீதிமன்றம் நிறுவப்பட்டுள்ளது.

அவ்வாறான வழக்குகளை விசாரணைக்கு உட்படுத்துவதற்கு, மேல் நீதிமன்ற ஆணையாளராக முன்னாள் நீதிபதி ஐராங்கனி பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

31 வருடங்கள் நீதிபதியாகச் சேவையாற்றிய ஐராங்கனி பெரேரா, இராணுவ வீராங்கனையான இனோகா செவ்வந்தி மற்றும் களனி பல்கலைக்கழக மாணவி மடுவந்தி படுகொலை உள்ளிட்ட முக்கிய மாகாண வழக்குகளை, ஆரம்பத்தில் விசாரணைக்கு உட்படுத்தினார்.

இந்தச் சிறப்பு நீதிமன்றத்திலேயே, புலிச் சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள சகல வழக்குகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை என்றிலிருந்து ஆரம்பமாகும் என்பது தொடர்பில் நீதியமைச்சினால் எவ்விதமான அறிவிப்புகளும் விடுக்கப்படவில்லை.

இதேவேளை, பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள புலிச் சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க மேல் நீதிமன்ற ஆணையாளராக முன்னாள் நீதிபதி ஐராங்கனி பெரேராவை நியமித்தமைக்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இது திட்டமிட்டு செய்யப்படும் வேலை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். இவ்விசாரணைகளை வழமைபோல, மேல்நீதிமன்ற நீதிபதிகள் செய்யலாமெனவும் இதற்காக தனியான நபர்கள் தேவையில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நீதிபதி ஐராங்கனி பெரேரா, தான் ஓய்வு பெறும் நாளன்று, அந்நியச் செலாவணி மோசடியில் வழக்கிலிருந்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவை விடுதலை செய்துள்ளார் எனவும் பீரிஸ் தெரிவித்தார்.

தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் மற்றும் கண்டி கல்விமான்கள் மற்றும் தொழில்வாண்மையாளர்களின் சங்கம் ஆகியவர்களுடன் இணைந்து நடத்திய மன்றத்தில் இந்தக் கேள்வியை எழுப்பியதாக கூறினார்.

தமிழீழ விடுதலைப் புலிச் சந்தேகநபர்களை விடுவித்து இராணுவ வீரர்களை கைதுசெய்வதற்கான நிலைமை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

Related Posts