புலிக்கொடி விவகாரத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது

முல்லைத்தீவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த புலிக்கொடி விவகாரத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த குறித்த சந்தேகநபர் வைத்தியசாலையிலிருந்து வெளியேறியபோது, வைத்தியசாலை வளாகத்தில் வைத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி திருவையாறு பகுதியை சேர்ந்த இவர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புத்துயிர் ஊட்ட முயற்சித்த குற்றச்சாட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

நேற்று இடம்பெற்ற கைது சம்பவத்தையடுத்து, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைதானவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து வருகின்ற நிலையில், மேலும் பல கைதுகள் இடம்பெற வாய்ப்புள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான், பேராறு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோது 15 கிலோ கிளைமோர் குண்டு, 120 ரி-56 ரக தோட்டாக்கள், வெடிபொருட்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான 2 கைக்குண்டுகள், 6 தொலைவுக் கட்டுப்பாட்டுக் கருவிகள், புலிக்கொடிகள் மற்றும் உடைகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts