ஐரோப்பிய ஒன்றியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை விதிக்கப்பட்ட விதத்தில் நடைமுறை ரீதியான தவறுகள் நடந்திருப்பதாக ஐரோப்பிய நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்புக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேன்முறையீடு முன்வைத்தால், அது இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே ஜீ.எல். பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த போதிலும், இலங்கையின் சட்டமா அதிபரோ, இராஜதந்திர துறை அதிகாரிகளோ அந்த வழக்கு விசாரணையில் இலங்கையின் தரப்பை வெளிப்படுத்தியிருக்கவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விமர்சித்திருந்தார்.
எனினும் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கத்தை எதிர்த்து மேன்முறையீடு ஒன்றை முன்வைப்பதற்கு பதிலாக, அரசாங்கம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் மீது அதற்காக அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்திவருவதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.
மீண்டும் விடுதலைப் புலிகள் மீது தடை கொண்டுவருமாறு மேன்முறையீடு ஒன்றை இலங்கை அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றிடத்திடம் முன்வைக்குமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதற்குப் பதிலளித்த வெளியுறவு அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், ஐரோப்பிய நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு ஒன்றை முன்வைப்பதன் மூலம் இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்புகள் ஏற்படலாம் என்று கூறியுள்ளார்.
எனினும் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டதன் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து, வெளிநாட்டு இராஜதந்திர அதிகாரிகளூடாக ஐரோப்பிய நாடுகளை அரசாங்கம் தெளிவுபடுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.