யாழில் மிரட்டி கப்பம் பெறும் சிங்கள நபர்கள் பொலிஸாரும் உடந்தை! வர்த்தகர்கள் குற்றச்சாட்டு!

cash-kappamவிடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தாய் தானே..! என்ற கேள்வியுடன் வரும் சிங்களம் பேசும் நபர்கள் யாழ்.வர்த்தகர்களிடம் கப்பம் பெறுவதாகவும், இது குறித்துப் பொலிஸில் பல தடவைகள் முறைப்பாடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென யாழ்.வர்த்தகர்கள் குற்றம் சாட்டுக்கின்றனர்.

கடந்த 2009ம் ஆண்டின் பின்னர் சில காலம் தணிந்திருந்த இந்தப் பிரச்சினை மீளவும் மோசமாக ஆரம்பித்திருப்பதாக வர்த்தகர்கள் குற்றம்சாட்டுக்கின்றனர்.

கைத்தொலைபேசி அழைப்பு ஒன்றுடன் வரும் சிங்களம் பேசும் நபர் வர்த்தக நிலையங்களின் உரிமையாளரிடம் உங்களுடன் ஒருவர் பேசவேண்டுமாம், என்றவாறே தொலைபேசியை கொடுக்க தொலைபேசியில் குறைத் தமிழில் பேசும் நபர் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தாய் தானே? என்ற கேள்வியை கேட்பாராம்.

இல்லை நான் அவ்வாறு கொடுக்கவில்லை என பதிலளித்தால் நீ எப்போது? எங்கு வைத்து? எவ்வளவு பணம் கொடுத்தாய்? என சகல விபரங்களும் இருக்கிறது, வவுனியாவுக்கு வரப்போகிறாயா? இல்லையென்றால் எங்களுடன் முடித்துக் கொள்ளப் போகின்றாயா? என்ற கேள்வியை உடனேயே கேட்பாராம்.

இதனால் பயந்துபோகும் பல வர்த்தகர்கள் தொலைபேசியுடன் வரும் நபரிடம் பணத்தை பல தடவை கொடுத்துள்ளனர்.

ஒரு சில தடவைகளுக்கு மேல் பணம் கொடுத்த வர்த்தகர்கள் இந்த விடயம் குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு கொடுத்தபோது அந்த தொலைபேசி இலக்கத்தை கேட்டறிந்து கொண்டு அந்த இலக்கத்திற்கு தொடர்பு எடுத்து யார் நீ? என அதட்டும் தொனியில் கேட்டுவிட்டு, பின்னர் வெளியே சென்று மச்சான் போட்டு சிரித்துப் பேசுவதாக வர்த்தகர்கள் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

Related Posts