தேசத் துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை 15 நாள் காவலில் வைக்க சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2009ஆம் ஆண்டு சென்னை, ராணி சீதையம்மாள் அரங்கில் மதிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய வைகோ, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்துகளை பேசினார். இதனையடுத்து, இந்திய இறையாண்மைக்கு எதிராக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசியதாக சென்னை ஆயிரம் விளக்கு பொலிஸார் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. வழக்கில் வைகோ அவ்வப்போது நீதிமன்றத்தில் ஆஜராகிவந்தார்.
இந்நிலையில், சென்னை பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்துக்கு வந்த வைகோ நீதிபதி முன் சரணடைந்தார்.
அப்போது, சொந்த பிணையில் செல்ல அவருக்கு நீதிமன்றம் வாய்ப்பளித்தது. ஆனால், வைகோ அதை ஏற்க மறுத்துவிட்டார். இதனையடுத்து வைகோவை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து வைகோ புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வைகோ, “இப்போது ஈழத்தில் நடப்பதை மூடி மறைக்க ஜெனிவாவில் சதி நடக்கிறது. ஒரு சில தமிழர்களை கையில் வைத்துக் கொண்டு குற்றம்சாட்டுகின்ற அளவிற்கு நிலைமை படுமோசமாக ஆகிவிட்டது. இதனை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் உலகத்திற்கு தெரிய வேண்டும்.
உண்மைகள் வெளியே வரவேண்டும் என்பதற்காகத்தான் நான் பிணையில் வரவில்லை. ஆனால் அதே நேரத்தில் நான் மதிமுகவின் மாவட்ட செயலாளர்களுக்கு, நிர்வாகிகளுக்கு திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு சிறு ஆர்ப்பாட்டம் கூட என்னை கைது செய்யப்பட்டதற்காக நடத்தக் கூடாது. வழக்கமான அரசியல் வழக்கமான அரசியல் எந்த இடத்திலும், பொதுமக்களுக்கோ, போக்குவரத்திற்கோ எந்த இடையூறும் செய்யக் கூடாது.
நான் கைதான பின் நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்வது என்பது வழக்கமாக அரசியல் கட்சிகள் செய்கிற வேலை என்ற குற்றச்சாட்டுகளுக்கு மதிமுகவினர் ஆளாகக் கூடாது.
அதற்கு பதிலாக சீமை கருவேல மரங்களை அகற்றும் வேலைகளை மதிமுகவினர் செய்ய வேண்டும். அதே போன்று சிறையில் இருக்கும் என்னை பார்வையாளராக யாரும் வந்து பார்க்க வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று வைகோ கூறினார்.