மேலும் 1400 முன்னாள் விடுதலைப்புலி போராளிகள் கைது செய்யபட உள்ளார்கள் என்ற இராணுவத்தின் கூற்றை முற்றுமுழுதாக நான் நிராகரிக்கின்றேன்.இக்கூற்றில் எதுவித உண்மையிருப்பின் இதுவரை தாம் கைது செய்தவர்களின் எண்ணிக்கை எத்தனை பேர் என்பதையும், எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்பதையும், முகாம்களிலிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றவர்களின் எண்ணிக்கை போன்ற சம்பந்தப்பட்ட புள்ளி விபரங்களை தரமுடியுமா? முடியாத பட்சத்தில் இக்கூற்று கேலிக்குரியதாகும். என தமிழர் விடுதலை கூட்டணித்தலைவர் ஆனந்தசங்கரி அறிக்ககையொன்றில் கண்டித்துள்ளார்.
ஒரு மணித்தியால பயிற்சியை விடுதலைப்புலிகளிடமிருந்து பெற்றிருந்தால்கூட அந்த இளைஞர்களும், யுவதிகளும் சரணடைய வேண்டுமென்றும் சிறு விசாரணையின் பினனர்; அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என அவர்களுக்கு வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற அரசாங்கம் தவறிவிட்டது.
ஆனால் அவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டு சரணடைந்த அனைவரும் விடுதலைப்புலி போராளிகள் என முத்திரை குத்தப்பட்டு புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்று நான் அடிக்கடி கூறி வந்திருக்கின்றேன்.
அத்தகையவர்களில் அநேகர் மிக சொற்ப பயிற்சி அல்லது எதுவித பயிற்சியும் எடுக்காது பாடசாலைகளில் கல்வி பயின்றவர்களாகும். அவர்களில் அநேகர் மேற்படிப்பை தொடர தகுதியுடையவர்கள் மட்டுமல்ல கல்வியை தொடர்ந்திருந்தால் வைத்தியர்களாகவோ, சட்டத்தரணிகளாகவோ, பொறியியலாளர்களாகவோ அல்லது குறைந்தபட்சம் பட்டதாரிகளாகவோ உருவாகியிருப்பார்கள்.
இவர்களில் அநேகர் பலாத்காரமாகவும் அச்சுறுத்தப்பட்டும் கட்டாய பயிற்சிக்காக கொண்டுசெல்லப்பட்டவர்கள். அவர்களின் உயர்கல்வி கற்கும் பொன்னான வாய்ப்பை நாசமாக்கி விடுதலைப் புலிகள் என நாமம் சூட்டியதுமல்லாமல் இன்னும் 1400 பேர் கைது செயப்படவுள்ளார்கள் என இராணுவத்தின் உண்மைக்கு மாறான நிலைப்பாடு மிகப்பெரிய பாராதூரமான குற்றச்சாட்டாகும்.
இராணுவத்தினரின் கவலையை விட என்னுடைய கவலை மிகவும் அதிகமாகும். எதிர்காலத்திலும் பயங்கரவாதம் தொடரக்கூடிய வாய்ப்பினை உருவாக்கவேண்டாமென இராணுவத்தினருக்கு முன்னெச்சரிக்கையாக கூறிவைக்க விரும்புகின்றேன்.
விடுதலைப்புலிகள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டுள்ளார்கள் என அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. மேலும் தற்போது பயங்கரவாதத்தை எவ்வாறு ஒழிப்பதென பிறநாடுகளுக்கு கருத்தரங்குகள், பயிற்சி முகாம்களை நடாத்தி வருகின்றது.எல்லாவற்றுக்கும் மேலாக விடுதலைப்புலிகள் அழிக்கப்பட்டுள்ளதாக மூன்றரை ஆண்டுகாலமாக அரசு கூறிவருகிறது.
இந்த நாட்டில் எப்பகுதியிலேனும் விடுதலைப்புலிகள் இல்லையென உறுதியாக நம்புகின்றேன். அப்படி ஒருசிலர் தப்பித்தவறி இருப்பின் அவர்களை கணக்கிலெடுக்கத் தேவையில்லை.ஏனெனில் கடந்த மூன்றரை ஆண்டுகாலமாக ஒரு துப்பாக்கிச்சூட்டு சத்தம் கேட்கவில்லை என்பது மட்டுமல்ல ஒருவரேனும் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்ததாகவோ, மரணித்ததாகவோ செய்திகள் இல்லை.ஆனால் விடுதலைப்புலிகளை வேட்டையாடுவதாக கூறிக்கொண்டு நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபடுமேயானால் எதுவித சம்பந்தமும் இல்லாத அப்பாவி இளைஞர்கள் தலைமறைவாக வாழ முற்படுவர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு. எஸ். சிறீதரன் அவர்களுடைய நெருங்கிய சகாக்கள் இருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்ந்து நடக்க இருப்பதற்கான முன்னோடியாகும்.
இதனை நாம் பாராமுகமாக விட்டுவிட முடியாது. இதுபோன்ற சம்பவங்கள் தொடருமானால் இராணுவ முகாம்கள் தொடர்ந்து நடத்துவதற்கும் மேலும் சில ஆரம்பிப்பதற்கும் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கையை நியாயப்படுத்துவதாகும்.
இராணுவ முகாம்களை தொடங்குவது, பலப்படுத்துவது, யுத்த தளபாடங்கள் வழங்குவது போன்றவை சிறுபான்மை மக்களை நிரந்தர பயத்துடனும், பீதியுடனும் வாழ வைப்பதற்கே என்பது தெளிவாகத் தெரிகிறது. வடக்கு கிழக்கில் வாழும் சிறுபான்மையினர் மட்டுமல்ல சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லீம்கள் என்ற பேதமின்றி முழுநாட்டவர்களுக்கும் வாழ்க்கை பரிதாபகரமாக அமையப்போகிறது.
சுருங்கக்கூறின் இந்த நாடு ஒரு இருண்ட எதிர்காலத்துக்கு அழைத்துச் செல்லப்படுகிறது என்பது தெளிவாகிறது. விடுதலைப் புலிகளின் நிர்வாகம் இன்றைய இராணுவத்தின் பிடியில் இருப்பதைவிட சிறந்ததென, அல்லது மோசமானதல்லவென விடுதலைப்புலிகளால் பாதிக்கப்பட்டவர்கள்கூட நினைக்கவோ அல்லது சொல்லவோ கூடாது.
நீதி நிலைப்பதாக தோன்றவேண்டுமானால் இராணுவம் புலிகள் என்ற பெயரில் வேட்டையாடுவதை நிறுத்தி உடனடியாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைகழக மாணவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் உதவியாளர்கள் உட்பட தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும்; விடுதலை செய்ய வேண்டும்.
எதுவித மருத்துவ உதவியும் அளிக்காது கொடூரமான முறையில் கைவிடப்பட்டு மரணித்த, எதுவித குற்றமும் செய்யாத அப்பாவி ஏழைப் பெண்ணுக்கு ஏற்பட்ட கதி தடுப்பிலுள்ள வேறுஎவருக்கும் ஏற்படக்கூடாது. இப் பெண்ணின்; மரணத்துக்குப் பொறுப்பாகவிருந்த அதிகாரியொருவர் வீட்டுக்கு அனுப்பப்பட வேண்டியவராவார்.
மிக்க ஆர்வமாக இராணுவத்தினரை கேட்க விரும்புவது ஆயிரக்கணக்கான அப்பாவி இலங்கை பிரஜைகள் கொல்லப்படுவதற்கு உபயோகிக்கப்பட்ட துப்பாக்கிகள், ரவைகள் போன்றவற்றை தந்துதவிய கே.பி என அழைக்கப்படுகின்ற குமரன் பத்மநாதனும் இந்த 1400 புலி போராளிகளுக்குள் அடக்கப்பட்டுள்ளாரா? என மேலும் தனது அறிக்ககையில் கேள்வி எழுப்பியுள்ளார்