புலிகளின் நடவடிக்கைகள் தொடர்கின்றன! யாழ். இளைஞர்,யுவதிகளுக்கு இந்தியாவில் போர் பயிற்சி!- ஹத்துருசிங்க

விடுதலைப்புலிகளின் இரண்டாம் பரம்பரை படையினரை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தாம் ஈடுபட்டுள்ளதாக யாழ்ப்பாண படைகளின் கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்க பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளார்.யாழ்ப்பாண இளைஞர் யுவதிகளுக்கு இந்தியாவில் போர்ப் பயிற்சி வழங்க தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சித்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்திய இலங்கை புலனாய்வுப் பிரிவினர் கூட்டாக மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளது.இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க பயன்படுத்தப்படவிருந்த முகாம் ஒன்றும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்தில் உள்ள அனுதாபிகளால் இளைஞர்கள் தென்னிந்தியாவுக்கு அனுப்பப்பட்டு அங்கு ஆயுதப் பயிற்சிகளை அடுத்து இலங்கைக்கு அனுப்பப்படும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அந்த முயற்சிகளை படையினர் தடுத்துள்ளதாக மஹிந்த ஹத்துருசிங்க, கோத்தபாயவுக்கு அறிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த ஊரான வல்வெட்டித்துறையில் அண்மையில் புலிக்கொடி ஏற்றப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட சிவசம்பு பிரசாந்தன் என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையில், சென்னையில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் தெரியவந்தன.

இந்த இளைஞர்களை மலேசியாவில் உள்ள விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூக வலையமைப்புகள் மூலமாக தொடர்பு கொண்டுள்ளனர் என்று தகவலும் வெளியாகியுள்ளது.இந்தியாவில் பயிற்சி பெற்றுக்கொண்டு நாடு திரும்பிய சிலரும் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஹத்துருசிங்க குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன. எனவே சர்வதேச அழுத்தங்களுக்கு உட்பட்டு யாழ்ப்பாணத்தில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படமாட்டாது என்று யாழ்ப்பாண கட்டளை தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளின் நடவடிக்கைகள் தொடர்பில் படையினர் விழிப்பாக செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையும், பிரித்தானியாவும் அமெரிக்காவும் தொடர்ந்தும் யாழ்ப்பாணத்தில் இருந்து படையினர் குறைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.எனினும் அவற்றின் கோரிக்கைக்காக படை முகாம்கள் அகற்றப்படமாட்டாது என்று ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, புலிகள் அல்லது வேறு பயங்கரவாத அமைப்புக்கள் செயற்படுவதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது என பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.நாட்டின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட புலி உறுப்பினர்களை திசை திருப்ப முடியாது என்ற காரணத்தில் இவ்வாறு புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்களை பலிக்கடாவாக்க புலிகள் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Related Posts