புலிகளுக்கு எதிரான யுத்தத்தினால் அங்கவீனமடைந்த பொலிஸாருக்கான பதவியுயர்வுகள் மற்றும் சம்பள அதிகரிப்புகள் வழங்கப்படுமென பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நிலையியற் கட்டளை 27/2இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் எழுப்பிய ,யுத்தத்தினால் அங்கவீனமடைந்த பொலிஸாருக்கான பதவி உயர்வுகள் மற்றும் சம்பள அதிகரிப்பு என்பன வழங்கப்படவில்லை. இது தொடர்பில் அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்ற கேள்விக்குப் பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அவயவங்களை இழந்து மருத்துவ ஆலோசனைக்கு அமைய ஓய்வுபெற்ற பொலிஸார், இலகுவான பணிகளில் அமர்த்தப்பட்டுள்ள பொலிஸாருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள அதிகரிப்பு வழங்குவது தொடர்பில் அமைச்சரவையில் ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சரவை அங்கீகாரத்துக்கமைய,யுத்தத்தினால் அவயவங்களை இழந்து சேவையிலிருந்து ஓய்வுபெற்ற 785 பொலிஸ் அதிகாரிகள், அவயவங்களை இழந்து இலகு சேவையில் ஈடுபட்டுள்ள 677 பொலிஸார் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இலகு சேவையில் ஈடுபட்டுள்ளவர்களில் 340 பேருக்கும் இரண்டு சம்பள உயர்வுகளை அவர்கள் அங்கவீனம் அடைந்த தினத்தின் அடிப்படையில் பெற்றுக் கொடுப்பதற்கு 2018ஆம் ஆண்டு நவம்பர் மாத சுற்று நிருபத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.