புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் எமது உறவுகள் வழங்கும் உதவிகளை நாம்
சரியாகப் பயன்படுத்த வேண்டும் – இவ்வாறு தெரிவித்தார் வடமாகாண கல்வி அமைச்சர் த குருகுலராஜா.
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களின் அறிவு சார் நூல்களின் அன்பளிப்பு நிகழ்வும், கிளிநொச்சி மகாவித்தியாலய உயர்தர மாணவர் மன்றத்தின் “உய்த்தறி ” நூல் வெளியீட்டு விழாவும் சனிக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு கிளிநொச்சி மகாவித்தியாலய மண்டபத்தில் ந.சயந்தன் தலைமையில் இடம்பெற்றது .
இதில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாண கல்வி அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்
புலம்பெயர்ந்த எமது உறவுகள், பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் கோடிக்கணக்கான நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்காகச் செலவிட்டு வருகின்றனர். இவ்வாறான உதவிகளை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்று பாடசாலைகளுக்குள் இராணுவத்தினர் வரவேண்டிய எந்த தேவையும் இல்லை. அவர்கள் உதவிகள் ஏதாவது செய்ய வேண்டுமாயின், வலயக் கல்வித் திணைக்களத்தினூடாகவே செய்ய வேண்டும். உடையார்கட்டு மகா வித்தியாலயத்தில் இராணுவத்தினர் நேரடியாக உதவிகளை வழங்கி வருகின்றனர்.
அங்கு அதிக இராணுவத்தினர் குவிக்கப்பட்டதால் இயல்புநிலை பாதிக்கப்பட்டதாகத் தெரிய வருகின்றது. இந்த நிலை மாற வேண்டும். இராணுவத்தினர் பாடசாலைக்கு வரவேண்டிய தேவையில்லை. எமது பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ள எமக்குத் தெரியும்.
மீளக்குடியமர்வின் போது இராணுவத்தினர் வீடு வீடாக வந்து உதவி செய்தார்கள். ஆனால் அதே இராணுவத்தினர் மாவீரர் வாரத்திலே வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்தல் விடுத்தனர் – என்று மேலும் தெரிவித்தார்.
நிகழ்வின் முன்னதாக அறிவு சார் நூல்களைக் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது . கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்குரிய நூல்களை யாழ் . இந்துக் கல்லூரி அதிபரும், முள்ளியவளை வித்தியானந்தாக் கல்லூரிக்கான நூல்களை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ . சரவணபவனும் வழங்கினர்.
உயர்தர மாணவர் மன்றத்தின் “உய்த்தறி” நூலின் முதற் பிரதியை வடக்கு மாகாண கல்வி அமைச்சர் த . குருகுலராசா வெளியிட்டு வைக்க யாழ் . இந்துக் கல்லூரி அதிபர் பெற்றுக் கொண்டார்.
தொடர்ந்து நூலுக்கான அறிமுக உரையை பேராசிரியர் க.தேவராசாவும், ஆய்வுரையை கலாநிதி க. ஸ்ரீகணேசனும் ஆசியுரையை கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க. முருகவேலும் நிகழ்த்தினர்.