புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படவேண்டும்!

கனடா உட்பட வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் சமூகத்தின் நன்மதிப்பைப் பெறவேண்டுமெனில், புலம்பெயர்ந்து வாழும் நாடுகளிலுள்ள தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்கவேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் திறந்துவைக்கப்பட்ட வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பணியகத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

“கனடா உள்ளிட்ட நாடுகளில் வாழ்கின்ற எமது மக்களைச் சந்தித்தேன். எல்லோருமே எங்கள் திறன் அபிவிருத்தி, முதலீட்டு முன்னேற்ற ஆக்க முயற்சி, கலாச்சார பரிமாறல் போன்றவற்றில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். எல்லோருமே நாட்டோடு இணைந்து செயற்படத் தயாராக இருக்கின்றார்கள் எனினும் அரசும் அதிகாரிகளும் வெளிநாட்டில் புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் மீது கொண்டுள்ள சில கருத்துக்கள் அவர்களை நாட்டிற்குள் வருவதை தடுக்கின்றன.

தெரிவு செய்யப்பட்ட தடை நீக்கங்களைக் கொண்டுவராமல் எல்லா அமைப்புகளின் தடையையும் நீக்கி இங்கு வரும் ஒவ்வொரு நபரையும் நன்கு விசாரணை செய்யுமாறு நான் பரிந்துரைக்கிறேன். எங்கள் நலனுக்காக இவர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கி அவர்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.”

கடந்த காலங்களில் காணாமல்போனவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் வெளிநாடு சென்றுள்ளதாகவும் கூறி அவர்களின் பிரச்சனைகளை மூடிமறைக்க முற்படக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ள வட மாகாண முதலமைச்சர் காணாமல்போனவர்களின் பிரச்சனைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

“காணமற்போனவர்களுக்காக அவர்களது உறவுகள் வவுனியாவில் நான்கு நாட்களாக உண்ணாவிரதம் இருந்துள்ளனர். அவர்களுக்கு உறுதி அளிக்கும் விதத்தில் ஏதாவது செய்ய வேண்டும். ஒரு கூட்டத்தில் ஒரு தாய் தன் மகளின் படத்தை தூக்கிப் பிடித்தபடி நிற்பதைக் காணமுடிகிறது. அரசியல் காரணங்களுக்காக அவர்கள் இறந்து விட்டார்கள் அல்லது வெளிநாடு போய்விட்டார்கள் என்று கூறுவது தவறு. பரவலாக்கலுக்கும் அதிகாரப்பகிர்தலுக்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை அமைச்சர் நன்கு அறிவார்.

இங்குள்ள தூதரக அலுவலகங்களில் பரவலாக்கலை கொண்டு வருவதன் மூலம் கொழும்பு மத்தி விடாப்பிடியாக ஒன்றை வைத்திருப்பதை விட பலர் இதை பகிர்ந்து செய்ய முடியும். கிழக்கிலும் வடக்கிலும் இருக்கும் நாங்கள் எங்களை சிறுபான்மையினர்களாகக் கொள்ளவில்லை. நாம் நமது பிரதேசத்தில் பெரும்பான்மையினர்தான். 1919 தொடக்கம் சிங்களத் தலைவர்கள் இதை ஏற்றுக்கொண்டுள்ளார்கள். எனவே அதிகாரப்பகிர்வுக்கு முழு உரித்தான நாங்கள் இதைக் கோர முடிவதோடு எங்கள் வேலைகளை நாங்களே செய்துகொள்ளவும் முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

Related Posts