புலம்பெயர் சொந்தங்களிடம் பிச்சைப்பாத்திரம் ஏந்தி சம்பாதிக்கும் பணத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் உல்லாசப் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் நிதியொதுக்கீட்டுக்கான விவாதத்தில் கலந்து கொண்டு
பேசுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
‘கௌரவ சபாநாயகர் அவர்களே!…. பாதுகாப்பு அமைச்சு குறித்த இந்த வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்ற எனக்கு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்;தை நான் நன்றியோடு வரவேற்கின்றேன்.
இலங்கைத்தீவு சின்னஞ்சிறிய தீவு. இத்தீவு சுதந்திரம் அடைவதற்கு முன்பும், சுதந்திரம் அடைந்ததன் பின்பும் பல்வேறு யுத்தங்களைக் கடந்து வந்த வரலாற்றைக் கொண்ட தீவு.
இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம,; சிங்கள மக்களின் பொருளாதார வளர்ச்சிக்காக, அவர்களது வாழ்வியல் உயர்ச்சிக்காக பயன்படுத்தப்பட வேண்டிய நிதியில் கணிசமான தொகையானது, கடந்த காலங்களில் பாதுகாப்பு செலவினங்களுக்காகவே பயன்படுத்தப்பட வேண்டிய காலச்சூழல் இருந்து வந்தது.
இந்த நாட்டில் வாழுகின்ற பூர்வீக மக்களில் ஒரு பகுதியினராகிய தமிழ்;; பேசும் மக்களின்; அரசியலுரிமை பிரச்சினை காரணமாகவே, இங்கு உரிமைப் போராட்டமும் ஆயுத வன்முறைகளும் தோன்றியிருந்தன.
ஆனாலும் அரசியல் தீர்வுக்கு விருப்பமின்றி தமிழ்த் தலைமைகள் தவறான வழியில் செயற்பட்டதால், உரிமைப்போராட்டமானது அழிவு யுத்தமாக மாற்றப்பட்டு, எமது மக்கள் அவலங்களையும் அழிவுகளையும் சந்திக்க வேண்டிய துயரங்கள் இங்கு நிகழ்ந்தன.
இந்த நிலைமைக்கு மூல காரணமாக இருந்த தமிழ்;; பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினை ஆரம்பத்திலேயே தீர்க்கப்பட்டிருந்தால், இந்த நாட்டில் வாழுகின்ற சகல இன, மத, சமூக மக்களின் பொருளாதார, வாழ்வாதார நிலைமைகள் இன்னமும் பல மடங்கு உயர்ந்து செழித்திருக்கும். ஆனாலும், அது அன்றே தீர்க்கப்பட்டிருக்கவில்லை என்ற மனத்துயரங்களே எமக்கு உண்டு.
பண்டா – செல்வா ஒப்பந்தம், டட்லி – செல்வா ஒப்பந்தம் என அடுத்தடுத்து எழுதப்பட்ட சமாதான ஒப்பந்தங்கள், அன்று மாறி மாறி ஆட்சிக்கு வந்திருந்த அரசாங்கங்களால் எழுதப்பட்டும், கிழித்தெறியப்பட்டும் வந்தன. இதனால், உருவான உரிமைப்போராட்டமானது அழிவு யுத்தமாக மாறி எமது மக்களையே பலியெடுத்திருந்தது.
தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வினை எட்டுவதற்கு, எமக்குக் கிடைத்திருந்த பொன்னான சந்தர்ப்பங்களில் முதன்மையானது இலங்கை இந்திய ஒப்பந்தமாகும். ஆனாலும், அதை சுயலாப தமிழ் அரசியல் தலைமைகளில் ஒரு சாரார் ஏற்றுக்கொள்ளாமலும், மறுசாரார் ஏற்றுக்கொண்டும் அதனை சரிவர பயன்படுத்தாமலும் இருந்ததால் இத்தனை அழிவுகளுக்கு நாம் முகங்கொடுத்து நிற்கின்றோம்.
இந்த இடத்தில் ஒரு விடயத்தை நான் கூற வேண்டும். அரசியல் நடத்த வந்தவர்கள் வியாபாரம் நடத்துகின்றார்கள். வியாபாரம் நடத்த வந்தவர்கள் அரசியல் நடத்துகின்றார்கள். அரசியல் பாதி! வியாபாரம் பாதி! இரண்டும் கலந்த கலவையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
தமிழ் மக்களின் நியாயமான உரிமைப் போராட்டம் நடந்த வேளையில் அப்பாவித் தமிழ் மக்களின் பணத்தை சுரண்டி, ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தவருக்கு இலங்கை – இந்திய ஒப்பந்தம் குறித்து தெரிந்து கொள்வதற்கு விருப்பம் இருந்திருக்காது.
சரவணப்பொய்யில் நீராடி தென்னிலங்கை சக்விதி ஊழலுக்கு நிகராக சப்ரா நிதி மோசடி நிறுவனம் நடத்திக் கொண்டிருந்தவர்கள் அவர்கள். இவரால்; ஏமாற்றப்பட்ட அப்பாவித் தமிழ்க் குடும்பங்கள் நடுத்தெருவில் நி;ன்றதும், தற்கொலை செய்து கொண்டதுமான வரலாறுகள் யாழ். மக்கள் அறிந்தவை.
இனந்தெரியாத நபர்கள் என்ற பெயரில் நடந்த அனைத்து வன்முறைகளையும் மூடி மறைத்து, தமிழ் மக்களின் அழிவுகளுக்கும், ஜனநாயக மறுப்புகளுக்கும் காரணமாக இருந்த ஊடக வியாபாரி அவர்.
தம்மோடு போட்டி போட்டு நின்ற சக தமிழ் ஊடகங்களை,
புலிசார்பு ஊடகங்கள் என்று அரசாங்கத்திற்கும், மறு புறத்தில் அதே ஊடகங்களை அரசசார்பு ஊடகங்கள் என்று புலிகளுக்கும் கூறி, தனது பத்திரிகையை மாத்திரம் விற்று பிழைப்பு நடத்தியவர்; அவர். அதுமட்டுமல்லாது தங்களது எழுத்தாற்றல்களால் தாங்கள் புலிகளுக்கு ஆட்களை சேர்த்து கொடுத்ததாகவும் கூறுபவர் இவர். எனவே இதன் மூலம் எமது இளைஞர் யுவதிகளை ஆயிரக்கணக்கில் பலிகொடுத்தும் இருப்பவர்.
இவர் தான் இப்போது வந்து நின்று சாத்தான் போல் வேதம் ஓதுகின்றார்கள். நக்குகின்ற நாய்க்கு செக்கென்ன? சிவலிங்கமென்ன? என்பது போல், எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினை குறித்தோ அல்லது எமது மக்களின் வாழ்வாதாரம் குறித்தோ அக்கறையில்லை. மக்கள் இறந்தால்தான் சவப்பெட்டிக் கடைக்காரரால் பிழைப்பு நடத்த முடியும் என்பது போல் எமது மக்கள் பிரச்சினைகளுக்கு மத்தியில்; தொடர்ந்து வாழ்ந்தால் தான் இவர்களால் அரசியல் நடத்த முடியும்.
கௌரவ சபாநாயகர் அவர்களே…! சாதாரண குடி மக்களின் வாழ்வாதார, பொருளாதார சமூக மாற்றங்களுக்காக பயன்படுத்த வேண்டிய நிதி வளங்களைப் பாதுகாப்பு செலவினங்களுக்காக பயன்படுத்த வேண்டிய நிலைமைக்கு காரணமாக இருந்தவர்கள் என்ற வகையில் இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய காலத்தில் இருந்த அரச தலைவர்களும், அதற்கு பிந்திய காலத்தில் ஆளுமையில் இருந்துவந்த தமிழ் அரசியல் தலைமைகளும், தவறுகளை ஒப்புக்கொண்டு அதற்கான தார்மீகப்பொறுப்பை ஏற்க வேண்டும்.
இந்தத் தவறுகளுக்கான காரணகர்த்தாக்களில் இருந்து நான் மட்டும் தப்பித்துக்கொள்ள விரும்பவில்லை. இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னர், நானும் தமிழ்; பேசும் மக்களின் உரிமைப் போராட்டத்தில் முன்னணி சக்தியாக இருந்தவன் என்ற வகையில், நானும் அதற்கான தார்மீகப்பொறுப்பை ஏற்றுக்கொள்கின்றேன்.
அதற்காக, இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்கு முந்திய எமது பாரம்பரிய தமிழ்த்; தலைமைகள், எல்லா விடயங்களிலும் சரியாகவே செயற்பட்டிருக்கின்றார்கள் என்று நான் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. அவை குறித்து நான் ஏற்கனவே இந்த நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைகளை நாடாளுமன்ற பதிவேட்டின் ஊடாக தெரிந்து கொள்ளலாம்.
நடந்தவைகள் யாவும் நடந்து முடிந்து விட்டன. இனி நடப்பவைகள் யாவும் நலம்பெற நடக்க வேண்டும். இதுவே எனது விருப்பம்.
கௌரவ சபாநாயகர் அவர்களே…! இனிமேலும் யாரும் ஒருவரை ஒருவர் பழி சொல்லிக்கொண்டிருக்க முடியாது. பழிகளை தீர்த்துக்கொள்வதாலும், பகைமை உணர்வுகளை வளர்த்துக் கொண்டிருப்பதாலும் இந்த நாட்டில் இருக்கும் தமிழ்; பேசும் மக்களுக்கான அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு கண்டு விட முடியாது.
யுத்தக் குற்றங்கள் என்று சொல்லப்படுபவைகளை விடவும் அதற்குக் காரணமாக இருந்த அரசியல் குற்றங்களே பிரதானமானவை. அரசியல் குற்றங்கள் என்று நோக்கினால் யாரும் யார் மீதும் தவறுகளை சுமத்தி விட்டி தப்பித்து விட முடியாது.
இன்று உறுதியான, பலமுள்ள, துணிச்சல் மிக்க ஓர் அரசியல் தலைமை இலங்கைத் தீவுக்குக் கிடைத்திருக்கிறது. அந்தத் தலைமையை ஏற்றிருக்கும் அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அழிவு யுத்தத்தை எவ்வாறு துணிச்சலோடு முடிவிற்குக் கொண்டுவந்திருந்தாரோ, அதேபோல் தமிழ்ப்; பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கும் தீர்வு காண்பார் என்பதே எனது எதிர்பார்ப்பு எனது நம்பிக்கை.
இதன் மூலமே எமது பொருளாதார வளங்களை, நிதி வளங்களை சாதாரண குடி மக்களின் வாழ்வாதார, பொருளாதார உயர்ச்சிக்காகப் பயன்படுத்த முடியும்.
நான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடனும், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடனும் அடிக்கடி ஆரோக்கியமான உரையாடல்களை நடத்தி வருகி;ன்றேன்.
தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பினர் போல், வெளியே வீரமும் உள்ளே சரணாகதியும் போல் அன்றி, வெளிப்படையாகவே கைகுலுக்கி நேர்மையாக பேசி வருகின்றேன். அழிவு யுத்தம் முடிவடைந்து விட்டது. இனி அரசியல் தீர்வும் அபிவிருத்தியும், எமது மக்களுக்கான வாழ்வாதார வசதிகளுமே ஆற்றப்படவேண்டிய பணிகளாகும்.
எமது நியாயமான கோரிக்கைகளை அரசாங்கம் ஏற்றுக் கொண்டு இந்த வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் அவற்றை செயற்படுத்தி வருகின்றது. இந்த வகையில், விசேடமாக வடக்கு கிழக்கில் சாதாரண நிலைமையை உறுதிப்படுத்துவதற்கான சில கொள்கை மாற்றங்களின் படி, பாதுகாப்புச் சேவைகளுக்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
வடக்கில் தங்கியுள்ள படையினரின் பிரசன்னங்களை குறைக்கும் வகையில் பாதுகாப்பு படையினரை அரசாங்கம் கட்டம் கட்டமாக குறைக்க வேண்டும் என்ற தீர்மானத்தை பாதுகாப்பு அமைச்சு எடுத்துள்ளது. இதை நாம் மகிழ்ச்சியோடு வரவேற்கின்றோம்.
இதேவேளை பாதுகாப்பு படையினர் தங்கியுள்ள எமது மக்களின் நிலங்களில் இருந்தும், பாதுகாப்பு படையினர் வெளியேறி அக்காணிகளை உரியவர்களிடம் ஒப்படைப்பதற்கும் பாதுகாப்பு அமைச்சு இணங்கியுள்ளது. இது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகின்றது. இது மிகவும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும். அத்துடன் இவ்வாறு வெளியேறும் படைவீரர்களுக்கு மாற்று தங்குமிட வசதிகள் விருத்தி செய்யப்படல் வேண்டும் என்ற கோரிக்கையினையும் நான் முன்வைக்கின்றேன்.
2012ஆம் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தில் பாதுகாப்பு செலவினங்கள் அதிகரித்து இருப்பது போல் தென்பட்டாலும், முன்னைய காலங்களில் பிற்போடப்பட்ட செலவினங்களை மீள செலுத்துகின்ற ஏற்பாடுகளாகவே இவை அமைந்துள்ளன. முன்பு வெளிநாடுகளிலிருந்து பிற்போடப்பட்ட கொடுப்பனவு அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்ட பல யுத்த உபகரணங்களுக்கான கொடுப்பனவுகளை மீள செலுத்த வேண்டியுள்ளது. இந்த அடிப்படையிலேயே 2012ஆம் வருடத்திற்கான பாதுகாப்பு செலவினங்களுக்கான நிதியொதுக்கீட்டினை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
இராணுவ வீரர்களுக்கான வைத்திய சேவையை பொதுமக்கள் வைத்திய பராமரிப்புச் சேவைகளுக்கான ஒதுக்கீடுகளுக்கு புறம்பான முறையில் பெற்றுக் கொள்ளல், பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான மீட்பு நடவடிக்கையின் போது, குறைந்த அளவில் முக்கியத்துவம் பெற்ற யுத்த செலவினங்களான படைகளின் தங்குமிட, தளபாட, பொது வசதிகள் போன்ற அடிப்படைத் தேவைகள், போர் முடிந்த இக் கால கட்டத்தில் படை வீரர்களுக்கு வழங்குதல் போன்ற நடவடிக்கைகளையும் நாம் வரவேற்கின்றோம்.
அதேநேரம், உயர் பாதுகாப்பு வலயம் என்பது இனி எங்கும் இருக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பகிரங்கமாகவே விடுத்திருந்த அறிவிப்பானது வேகமாக நடை முறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் எஞ்சியுள்ள இடங்களிலும் எமது மக்களுக்கான மீள் குடியேற்றங்கள் துரிதமாக நடைபெறவுள்ளன.
ஏற்கனவே மீள்குடியேற்றம் செய்யப்பட்ட எமது மக்களின் வாழ்வாதார வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்றும், இனி நடக்கவிருக்கும் எமது மக்களின் மீள் குடியேற்றங்களும் அர்த்தமுள்ளதாகவும், வாழ்வாதார வசதிகளுடன் கூடியதாகவும் துலங்க வேண்டும் என்றும் நாம் அரசாங்கத்திடம் கோரி வருகின்றோம்.
இலங்கையை ஆசியாவின் ஆச்சரியமாக மாற்றும் ஜனாதிபதியின் சிந்தனைக்கு ஏற்றவாறு 2012ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டில் யுத்தத்தால் நலிந்து போன எமது மக்களின் வாழ்வாதார வசதிகளுக்கும் போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எய்தவன் இருக்க, அம்பை நோக முடியாது என்பது போல சரணடைந்த மற்றும் அரசியல் காரணங்களுக்காக கைது செய்யப்பட்ட யாவரும் எமது மக்களின் பிள்ளைகளே. அவர்கள் நீதிவிசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அல்லது புனர்வாழ்வு அளிக்கப்பட்டு, விரைவாக பெற்ண்;றார்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.
எமது விருப்பங்களுக்கு ஏற்றவாறு அரசாங்கம் இதுவரை பத்தாயிரத்திற்கும் அதிகமான முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினர்களை அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைத்திருக்கிறது. அதற்காக நான் தமிழ் மக்களின் சார்பாக அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
இதேவேளை, எஞ்சியுள்ள ஏனையவர்களையும் புனர்வாழ்வு அளித்து அல்லது நீதி விசாரணைக்கு உட்படுத்தி, அவர்களையும் விரைவாக பெற்றோர்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் விருப்பம் கொண்டுள்ளமை குறித்து நான் மகிழ்ச்சி அடைகின்றேன்.
சில இடங்களில் பாதுகாப்பு படையினர் வீடிழந்த தமிழ் மக்களுக்கு தாமே வீடுகளையும் அன்பளிப்பாக அமைத்து கொடுத்து வருகின்றார்கள். அது மட்டுமல்லாது வீடுகளுக்கான உபகரணங்கள், தொழில் உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை வழங்கியும் பல்வேறு உதவிகளையும் செய்து வருகின்றனர்.
ஆனாலும், புலம்பெயர் நாடுகளுக்கு சென்று அங்குள்ள எமது மக்களிடம் பிச்சைப்பாத்திரம் ஏந்தி வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அந்த பணத்தில் தமது ஆடம்பர உல்லாச பயணங்களை மட்டுமே மேற்கொண்டு வருகின்றார்கள். அவலப்படுகின்ற எமது மக்களுக்கு எந்தவொரு சேவையையும் கூட இன்று வரை ஆற்றியிருக்கவில்லை.
கௌரவ சபாநாயகர் அவர்களே…! இந்த நாட்டில் தனிமனித பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். அந்த வகையில்; யுத்தத்திற்கு பின்னரான சூழல் என்பது படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகின்றது.
சுதந்திரமாக பேசுதல், சுதந்திரமாக எழுதுதல், சுதந்திரமாக நடமாடுதல், சுதந்திரமாக தாம் விரும்பிய அரசியல் வழிமுறையை ஆதரித்தல் என்பன குறித்த முன்னேற்றகரமான மாற்றங்கள் தொடர்ந்தும் இங்கு உறுதி செய்யப்பட வேண்டும்.
உயிர் வாழ்தல் குறித்த நம்பிக்கைகள் இங்கு வளர்ந்திருக்கின்றன. இது தொடர்ந்தும் பாதுகாக்கப்பட வேண்டும்.
வன்முறைகளை மட்டும் வழிபட்டுக்கிடக்க வேண்டிய சூழலுக்குள் சிறைப்பட்டுக்கிடந்த எமது மக்கள் சமூகம், மனிதநேயப்பண்புகள் குறித்த உயரிய சிந்தனையை நோக்கி நிமிர்வதற்கே விருப்பம் கொண்டுள்ளது.
காலத்திற்குக் காலம் தோன்றி வந்த தமிழ்த்; தலைமைகள் யாவும் இந்த நாட்டில் நிலவும் அரசியலுரிமை பிரச்சினையை அடுத்தடுத்த சந்ததிகளின் வாழ்வின் மீதே சுமையிறக்கிச் சென்றிருக்கின்றன.
அவர்களைப் போல் நாமும் அடுத்துவரும் சந்ததியின் மீது எந்த பிரச்சினைகளையும் சுமத்தி விட்டு சென்றுவிடப் போவதில்லை. எமது காலத்திலேயே தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்.
அதற்காகவே நாம் தூற்றுதல்களுக்கு மத்தியிலும் துணிச்சலோடு நிமிர்ந்து நின்று, எமது நடைமுறைச்சாத்தியமான வழிமுறையில் உழைத்து வருகின்றோம்.
ஊசிமுனைத் துவாரத்தினுள் ஒட்டகத்தை செலுத்தலாம். பாற்கடலில் பொரித்த மீன் பிடிக்கலாம். கடலைக்கூட கலப்பை கொண்டு உழுது பார்க்கலாம். முதலையைக் கூட மனிதனாக மாற்றலாம். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மட்டும் அரசியல் தீர்வுக்கு இணங்க வைக்க முடியாது. ஏனென்றால் அது ஒரு தேர்தல் கூட்டு.
அப்படி மாறி வந்து விட்டால் அது ஓர் அதிசயம்தான். அவ்வாறு ஓர் அதிசயம் நடந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மனந் திருந்தி வந்து எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினை தீர்வுக்கு தமது பங்களிப்பையும் செலுத்தினால் மகிழ்ச்சியுடன் வரவேற்பேன்.
சிலரை பலகாலம் ஏமாற்றலாம். பலரை சிலகாலம் ஏமாற்றலாம். ஆனால் எல்லோரையும் எல்லா நேரமும் ஏமாற்ற முடியாது. எனவே தமிழ் மக்களை தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் ஏமாற்றிக் கொண்டிருக்க முடியாது.
வாக்குறுதிகளை கொடுத்தீர்கள். வாக்குகளை அபகரித்தீர்கள். நாடாளுமன்றம் சென்று எமக்காக என்ன செய்தீர்கள்? என்று எமது மக்கள் இப்போதே கேட்கத் தொடங்கி விட்டார்கள். இதன் ஒரு வெளிப்பாடாக புத்திஜீவிகளில் ஒருசாரர் மகஜர் ஒன்றினையும் அண்மையில் வெளியிட்டுள்ளனர்.
‘பாம்புக்குட்டிக்கு பல்லு விளக்கினோம். சும்மாவா இருந்தோம்’; என்று நீங்கள் தமிழ் மக்களுக்கு கூறி, அதை அவர்கள் கேட்பதற்கு ஒன்றும் தமிழ் மக்கள் ஏமாளிகள் அல்ல.
வராதவர்களுடைய வருகைக்காகக் காத்திருக்காமல், தமிழ்; பேசும் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் சமவுரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாக வாழும் அரசியல் தீர்வு முயற்சிகளை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும் என்பதே எமது விருப்பம், எதிர்பார்ப்பு, நம்பிக்கை.