வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்யவென புலம்பெயர் நாடுகளில் இருக்கும் பலர் எமக்கு பணத்தை அனுப்ப முன்வந்துள்ள போதும் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே மாகாண சபை அதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டிய கடப்பாடு உண்டு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
மண்டைதீவு பிரதேச வைத்தியசாலையின் திறப்பு விழா நிகழ்வு நேற்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
யுத்த காலத்தில் மருத்துவர் பற்றாக்குறை மிக மேசமாக காணப்பட்டது போலவே இப்போதும் காணப்படுகின்றது. எனினும் இவற்றை நிவர்த்தி செய்ய யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும் வடக்கு மற்றும் ஏனைய பகுதியின் வைத்தியர்களையும் எமது பிரதேசத்தில் சேவையாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்து வடக்கில் உள்ள பிள்ளைகளில் 80 வீதமானவர் போசாக்கு அற்றவர்களாகவே உள்ளனர் என யூ.என்.எச்.சி ஆரின் 5வருட கணிப்பின் படி வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதனை நிறுத்த மாகாண சபை கவனத்தில் எடுத்துச் செயற்படுத்த வேண்டும்.
மேலும் யாழ்ப்பாணத்தில் கிணற்றடி நீர் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றது. எனவே மழை நீரைத் தேக்கிவிப்பதன் மூலம் முடிவு கட்டிவிடலாம். இதற்கு நவீன உத்திகளை பெற்றுக் கொள்வது நல்லது.
அத்துடன் புலம்பெயர் தமிழர்கள் வடக்கின் அபிவிருத்திக்கு உதவிகள் வழங்குவதற்கு உடன்பட்டிருந்த போதிலும் அரசு தடையாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
மண்டைதீவு பிரதேச வைத்தியசாலை வைபவ ரீதியாக திறந்து வைப்பு
வட மாகாண சபையின் சேவையை பொறுத்திருந்து பாருங்கள் – சத்தியலிங்கம்