முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமடு மகா வித்தியாலய மாணவி செல்வி சுரபி ரஞ்சித், புலமைப்பரிசில் பரீட்சையில் 183 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.முதலிடத்தைப் பெற்ற மாணவி சுரபி ரஞ்சித் தனது பெறுபேறு தொடர்பில் கூறுகையில்,
சென்ற வருடம் எமது பாடசாலையில் 7 மாணவர்கள் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருந்தனர். பாடசாலைச் சமூகம் அவர்களை கெளரவித்த வேளை, அடுத்த வருடம் நானும் பரீட்சையில் சித்தியடைய வேண்டும் என்ற ஆசை மனதில் குடிகொண்டது. இன்று அது நிறைவேறியது.
அதுமட்டுமன்றி முல்லைத்தீவு மாவட்டத்திலேயே 183 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமை மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது.
என்னுடைய வெற்றிக்கு எனது பாடசாலையின் ஆசிரியர் ப. சுதர்சன் முக்கிய காரணமாக இருந்தார். அவர் பாடசாலையில் காலை மாலை பாராது விடுமுறை தினம் என்று பாராது முழுநேரமும் எம்மோடு இருந்து தனது நேரத்தை எமக்காகச் செலவளித்து எம்மை வழிப்படுத்தியிருந்தார்.
சிறப்பான வழிகாட்டலினாலேயே என் சார்ந்த ஏனைய மாணவர்களும் வெற்றிபெற முடிந்தது. தொடர்ச்சியான பயிற்சிகளும் பரீட்சைகளும் எனது வெற்றிக்கு ஊன்றுகோலாக அமைந்தது.
எதிர்காலத்தில் ஒரு வைத்தியராக வரவேண்டும் என்பதே என்னுடைய அவா.அதற்கு முயற்சியும் பயிற்சியும் தொடர்ந்து துணைநிற்கும் என நம்புகிறேன் என்றார்.
போரினால் உளவியல் ரீதியாக பாதிப்படைந்திருந்த போதிலும் விசுவமடு மகா வித்தியாலயத்தில் 17 மாணவர்கள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.